சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி அத்துமீறி கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 47 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தததாக இலங்கை கடற்படை கைது செய்து உள்ளதோடு அவர்களது 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறிய தகவல் படி இலங்கை அரசின் காவலில் 141 மீனவர்கள் உள்ளதோடு 198 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 3544 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கையே பிரச்னையாக உள்ள நிலையில் தமிழக முதல்வர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவ்வப்போது இப்பிரச்னை தொடர்பாக கடிதம் எழுதுவதோடு நிறுத்தி கொள்வதால் இத்துயரத்திற்கு பதில் வராமலே உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கச்சதீவை மீட்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பபட்டது. ஆனால் இதனை பிரதமர் கண்டுகொள்ளாததால் தீர்வு எட்டப்படாமல் மீனவர்கள் கைது தொடர்கிறது.
இலங்கை சட்டதிட்டத்தின் படி எல்லைமீறல் கடுமையான தண்டனையாக கருதி கூடுதல் அபராதம் மற்றும் தண்டனை அளிக்கப்படுகிறது. பாரம்பரிய தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை உண்டு என கச்சதீவு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டும் இதனை கண்டுகொள்ளாமல் தமிழக மீனவர்களை கைது செய்வதில் இலங்கை அரசு அதீத ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் மீனவர்களது வாழ்வு கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
தமிழக மீனவர்களும் இந்திய பிரஜை தான் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து போனதின் விளைவாக தமிழக மீனவர்கள் கைது தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இவ்விஷயத்தில் பிரதமர் தலையிட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.இரு நாடுகள் அளவிலான கூட்டு கண்காணிப்பு மற்றும் கடல் எல்லை தொடர்பான வரையறை, GPS பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
தற்போது முதல் இதுவரையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படவும், அவர்களது மீன்பிடி படகுகளை வழங்கப்படவும் வேண்டும். தண்ணீரில் மட்டுமல்ல கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களின் துயரங்கள் தொடராமல் தடுத்திட ஆட்சியாளர்கள் அக்கறை காட்டி அவசியமான நடவடிக்கைகளை அவசரமாக எடுத்தாக வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply