சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மத்திய அரசு சுற்றுச்சூழல் சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16 ஜனவரி 2020 வெளியிட்ட அரசாணையின்படி எண்ணை மற்றும் எரிவாயு ஆய்வு கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்த முறையினை மாற்றியது. இதன்படி மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தால் போதுமானது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதிலும் விலக்கு அளிக்கப்பட்டது.
இதன்படி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராமனாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை, ராமனாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி கீழக்கரை, கடலாடி தாலுகா மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா பகுதிகளில் புதிதாக எண்ணை கிணறுகள் அமைக்க மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 31.10.23 ல் விண்ணப்பித்தது. அப்போதே அரசு அதனை நிராகரித்திருக்க வேண்டும். தற்போது அதற்கு அனுமதி அளித்த நிலையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தினை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இதனை வரவேற்கின்றோம்.
கடந்த 2020ல் காவிரி டெல்டா பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை அமைக்க முடியாத வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசு சட்டம் இயற்றியது. இருப்பினும் ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் செயல்படுவதை கட்டுபடுத்த இயலாத நிலையே உள்ளது. ராமனாதபுரம் மாவட்டத்தில் 0NGC நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு தற்போது 28கிணறுகள் செயல்பாட்டில் உள்ளது. கடல்வளம், மீன்வளம், நிலத்தடி நீர் உள்ளிட்ட பாதிப்புகளை கருதி செயல்படுத்தப்படும் திட்டங்களையும் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் மூலம் சுற்றுச சூழலுக்கு பேராபத்து ஏற்படும் என பேரா.சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர்குழு அரசிடம் கடந்த 2022 பிப்ரவரியில் அறிக்கை அளித்தது. இதுவரையில் அந்த அறிக்கையினை அரசு வெளியிடவில்லை. யாருடைய நலனை காப்பதற்காக இந்த அறிக்கை மூடி மறைக்கப்படுகிறது?
இந்த அறிக்கையினை அரசு வெளியிடுவதோடு அதன் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டுவரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் மூடிட வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி சுற்றுசூழல் பேராபத்து நிகழ்வதில் இருந்து தமிழகத்தை பாதுகாத்திட வேண்டும்.மக்கள் நலன் காக்கப்படவும், சுற்றுசூழல் பேரழிவு தடுக்கபடவும், விவசாயம் காக்கப்படவும், நிலத்தடி நீர் பாதிப்பை போக்கவும், மீனவர் நலன் பாதுகாக்கவும் இத்தகைய அழிவு திட்டங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply