சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம். 2019 ன் சட்டபிரிவு 4ன் படி தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவை என குறிப்பிடுகிறது. இந்நிலையில் கடந்த 17ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டம் நிறைவேறி உள்ளது. இதன்படி இனிமேல் பல்கலைகழகங்களை ஏற்படுத்த மாநகராட்சி பகுதிகளில் 25 ஏக்கர். நகராட்சி அல்லது பேரூராட்சி பகுதிகளில் 35 ஏக்கர், பிற பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் போதுமானது.
மேலும் இச்சட்டத்தின்படி தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் எந்த ஒரு அரசு உதவிபெறும் கல்லூரி தனியார் பல்கலைகழகமாக மாற விருப்பம் தெரிவித்ததும் அதற்கு தகுதி உயர்வு வழங்கப்படும். அக்கல்லூரிகளுக்கு அரசு உதவி மற்றும் அனைத்து வகை மானியங்களும் நிறுத்தப்படும். இதனால் கல்லூரி நிர்வாகம் தங்கள் விருப்பத்திற்கு கட்டணத்தை உயர்த்தி கொள்ளலாம். இதுபோல் ஆசிரியர்கள் நியமிக்கும் உரிமை, அவர்களுக்கு சம்பள நிர்ணயம் அனைத்தும் தனிநபர் விருப்பத்திற்கு சென்று விடும்.
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு உதவிபெறும் கல்லூரிகள் இதன்படி தனியார் பல்கலைகழகமாக உருமாற்றம் கொண்டால் கல்வி மேலும் கடை சரக்காகி விடும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உயர்கல்வி என்பது எட்டா கனியாகிப்போகும். தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்று சட்டம் 1976ன் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணி வரையறை அனைத்தும் இந்த ஒற்றை சட்டத்தால் நீர்த்துப்போனது.
ஏற்கனவே தனியார் கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கு மாணவர்களிடம் பகல் கொள்ளை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களது அத்துமீறல்களுக்கு இச்சட்டம் அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பும், இடஒதுக்கீடும் பறிபோகும் நிலையே ஏற்படும்.மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை கேள்விகுறியாக்கிடும் இச்சட்டம் குறித்து எவ்வித கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்படாமல் அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை தட்டிப்பறிக்கும் இத்திட்டத்தை எதிர்க்கிறோம். அரசின் சொத்துக்கள், அடிப்படை கட்டமைப்புகள் தனியாருக்கு இதன்மூலம் அரசே தாரைவார்க்கிறது. இதனால் கல்வியின் தரம் கூடும் என்பது எல்லாம் பொய்யான வாதம். தேசிய கல்விக் கொள்கை 2020 தனியார் மயத்தை ஊக்குவிக்கிறது. இதனை எதிர்ப்பதாக கூறி வரும் தமிழக முதல்வர் பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரை அதன் பல அம்சங்களை அமல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே இத்தகைய முடிவையும் அவர் எடுத்து உள்ளதாகவே தெரிகிறது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply