சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
தமிழகத்தில் 208 அரசு பள்ளிகள் மூடப்படுவதாக பள்ளிகல்வித் துறை அறிவித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக குழந்தைகள் பிறப்பு விதிதம் குறைவு மற்றும் மாணவர் எண்ணிக்கை குறைவு என்ற காரணங்களை கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகாலமாக கல்வி தனியார்மயமாக்கபட்ட நிலையில் பெற்றோர் தனியார் பள்ளிகளை நோக்கி சென்றதால் அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது 40 லட்சமாக சரிந்தது.அரசு பள்ளி மாணவர்களுக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய போதும் ஏன் இந்த நிலை ஏற்பட்டது?
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் (கட்டிடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறைகள்) மற்றும் ஆசிரியர் நியமனங்கள் போதுமான அளவில் இல்லாதது மாணவர் மற்றும் பெற்றோர் இடையே அவநம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர் வேலைநிறுத்தங்களால் கல்வி தரம் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடுகிறது. கிராமங்களில் மக்கள்தொகை குறைவு, நகர்புறங்களுக்கு புலம்பெயர்தல், மத்திய அரசின் நிதி ஆயோக் உள்ளிட்ட அரசு பள்ளிக்கு எதிரான கொள்கை, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தரமற்ற நிர்வாகம், பழுதான கட்டிடங்கள், தகுதியற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சொல்லலாம்.
இத்தகைய குறைபாடுகளை களைந்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, ஆசிரியர் நியமனங்களை அதிகரித்து பயிற்சி மற்றும் திறன் மேம்படுத்துதலை உறுதிசெய்வதோடு, தரமான கல்வியை வழங்கினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். மாறாக மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி அதனை மூடுவது தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கே துணைபுரிவதாக அமையும். எனவே இத்தகைய அறிவிப்பினை அரசு கைவிட்டு மீண்டும் மூடப்பட்ட பள்ளிகளை திறக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் பிள்ளைகளே அதிகமாக பயின்று வரும் நிலையில் இத்தகைய நடவடிக்கை அவர்களது கற்றலை பாதிக்கும். அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை.இதனை அரசு பள்ளிகளால் மட்டுமே நிறைவேற்றிட இயலும். இத்தகைய முடிவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான செயலாகும்.
மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளிலும் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேராமல் இருப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் விழிப்புணர்வு மேற்கொண்டு அரசு பள்ளி மீதான நம்பகதன்மையினை ஏற்படுத்தி மீண்டும் மாணவர் சேர்க்கையினை கொண்டுவர வேண்டும். இதன்மூலம் மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்படும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply