சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பகுதிகள் வளர்ந்து வருகின்றன. ஆனால் முறையான திட்டமிடலோ, விதிமுறைகளோ கடைபிடிக்கப்படாததால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். வளர்ந்து வரும் ஒவ்வொரு நகரிலும் மக்கள்தொகை பெருகும் போது அதை ஒட்டிய பகுதிகள் புறநகர்களாக உருவாவதை தடுக்க முடியாது. ஆனால் இதன் அறிகுறிகள் தென்பட்டதும் அதனை முறைபடுத்துவதின் மூலமே மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை தடுக்க முடியும்.
இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களிலும் முதன்மை நகரத்தின் வளர்ச்சியை சமநிலைப்படுத்தும் வகையில் துணை நகரங்களை அரசு அமைக்கிறது. இதன்மூலம் முதன்மை நகரத்தின் மக்கள்தொகை, போக்குவரத்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அழுத்தங்களை குறைக்க இயல்வதோடு சுற்றுசூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றை தடுக்க இயலும். இதனை செயல்படுத்த தவறுவதால் நகரங்கள் நரகங்களாக மாறி மக்கள் வாழ்வதற்கே போராடும் நிலை உள்ளது.
பிரதான நகருக்கு வெளியில் நில இருப்பு, இயற்கைவளம், தற்போதைய சூழல் இவற்றை கவனத்தில் கொண்டு சாத்தியங்கள் இருப்பின் இங்கு மக்கள் குடியேற்றம் மேற்கொள்வதால் வளர்ச்சி என்பது பரவலாக சமச்சீராக இருப்பதால் பாதிப்புகள் தவிர்க்கப்படும். ஆனால் தற்போது முதன்மை நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களை கபளீகரம் செய்வதும், உள்ளாட்சி நிர்வாகத்தை தகுதி உயர்த்துவது மட்டுமே அரசு செய்து வருகிறது. இதனால் மக்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சி எட்ட இயலாத நிலையே உள்ளது.
இத்தகைய பிரச்னைகளை கவனத்தில் கொண்டு தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் சென்னை,மதுரை, கோவை,,திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய புறநகரங்கள் உருவாக்கப்படும் (வாக்குறுதி எண்.393) என தெரிவித்து இருந்தது.ஆனால் இதுவரை இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இத்திட்டத்தை அரசு கைவிட்டு உள்ளதாகவே தெரிகிறது.
சென்னை உள்ளிட்ட நகரங்கள் தற்போது தங்களது முறையற்ற வளர்ச்சியால் சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதுடன் மழை, வறட்சி காலங்களில் மிகுந்த இடர்பாடுகளை சந்திப்பது தொடர்கதையாகவே உள்ளது. இத்தகைய நிலையே ஏனைய நகரங்களுக்கும் ஏற்பட உள்ள நிலையில் அவற்றின் வளர்ச்சியை முறைபடுத்துவதும், அடிப்படை வசதிகளை திட்டமிடுவதும் காலத்தின் தேவையாக உள்ளது. ஆனால் கவர்ச்சி திட்டங்களின் மேல் செலுத்தப்படும் கவனத்தை அரசு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தவறுவதால் ஏற்படும் பாதிப்புகளை வரும் காலங்களில் மக்களே எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply