சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் உள்ள 21 அரசு பல்கலை கழகங்களில் 13 பல்கலைகழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதில் பல்வேறு பழமைவாய்ந்த பல்கலை கழகங்களும் அடங்கும். 1957 ல் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட சென்னை பல்கலைகழகம் 5 குடியரசு தலைவர்கள், நோபல் பரிசு பெற்ற மாமேதைகளை நமக்கு தந்த சிறப்புமிக்கது. இது நடைமுறை செலவுகளுக்கே தட்டு தடுமாறி வருகிறது.பல்கலைகழகத்தின் வருட செலவுகள் சுமார் 240 கோடியாகவும் வருவாய் 100 கோடியாகவும் உள்ளது. மாநில அரசு தணிக்கை ஆட்சேபனை காரணம் காட்டி அரசு ஆண்டுக்கு ரூ25 முதல் 30 கோடி மட்டுமே வழங்கி வருகிறது.
மூன்று ஆண்டாக நிலவும் நிதி பற்றாக்குறை காரணமாக இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ் அச்சிட முடியாத அவல நிலையில் உள்ளது. உயர்கல்வி அல்லது வேலை வாய்ப்புக்கு சான்றிதழ் தேவைப்படுவோர் பல்கலைகழகத்தில் தங்கள் சேர்க்கை மற்றும் பணி நியமன கடிதத்தை காண்பித்து சான்றிதழ் பெற வேண்டி உள்ளதால் அவர்களது கல்வி மற்றும் தொழில் தடைபடும் நிலையே உள்ளது. இதுபோலவே செயல்பாட்டில் இருந்த இலவச கல்வி திட்டமும் நிதி தட்டுப்பாட்டால் முடங்கி உள்ளது.
சென்னை பல்கலைக்கு நிகராக மதுரையில் 1965ல் தோற்றுவிக்கப்பட்ட மதுரை பல்கலைகழகம் பின்னாளில் மதுரை காமராஜர் பல்கலைகழகமாக மாறியது. கல்வி கட்டணம் வழியாக வருடம் 60 கோடி வரும் நிலையில் செலவு 144 கோடியாக உள்ளது. 2004-05 ல் இருந்த 471 ஓய்வூதியர் எண்ணிக்கை தற்போது சுமார் 1200 ஆக அதிகரித்து உள்ளது செலவுத்தொகை கூடுதல் ஆக்கி உள்ளது. மானிய வெட்டு, தொலைதூர கல்வி வருமானக்குறைவு, ஓய்வூதிய சுமை பல்கலை நிர்வாகத்தை தள்ளாட வைத்து உள்ளது.
கடந்த 2010ல் தொலைதூர கல்வி மூலம் 50 ஆயிரம் பேர் பயின்ற நிலையில் 2023 ல் 6000 ஆக சுருங்கியது. அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே பயில்பவர்கள் இருக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் பல்கலைகழக மானிய குழுவின் கெடுவால் இந்நிலை உருவானது.பல்கலை கழக அவசரதேவைக்கு என வைக்கப்பட்ட மூலதன நிதி 300 கோடி ஏற்கனவே செலவான நிலையில் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி மட்டுமே ரூ 50 லட்சம் உள்ளதாக கூறப்படுகிறது.
13 பல்கலை கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் அங்கு பயிலும் மாணவர்கள் பட்டம் பெற இயலாத நிலை ஒருபுறம். நிதி நெருக்கடி, ஆசிரியர் பற்றாக்குறை மறுபுறம் என பல்கலைகழகங்கள் திணறி வரும் நிலையில் கல்வியின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் கேள்விகுறியாகி உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இதற்கு தீர்வு காண்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுபற்றி கண்டுகொள்ளாததால் பல்கலை கழகங்கள் தங்கள் அந்திம காலத்தை எதிர்நோக்கி உள்ளன. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அரசு விளம்பரபடுத்துவதில் மட்டும் என்ன விளைவு வந்துவிடப் போகிறது?
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.












Leave a Reply