சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை கடந்த 2003 நவம்பர் முதல் தமிழக அரசே நடத்தி வருகிறது. இதன்மூலம் 2021-22 ஆண்டில் 36050 கோடி, 2022-23 ஆண்டில் 43,121 கோடி, 2023-24 ஆண்டில் 45856 கோடி 2024- 25 ஆண்டில் 48344 கோடி வருமானம் அரசுக்கு கிடைத்து உள்ளது. குறிப்பாக 2025 தீபாவளி(3 நாட்கள்) 789.85 கோடி, 2025 பொங்கல் (2 நாட்கள் 454 கோடி விற்பனை நடந்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 4800 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் சராசரியாக தினமும் 120-150 கோடி விற்பனை நடந்து வருகிறது. இதனால் கல்வி, மருத்துவத்தை தாரைவார்த்த அரசு மது விற்பனையை மட்டும் விட்டு கொடுக்காமல் உள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் இப்போது மது அருந்துவோர் எண்ணிக்கை 49 லட்சமாக உயர்ந்து உள்ளது எனவும் மது அருந்துவோரின் சராசரி வயது 28 லிருந்து 13 ஆக குறைந்து உள்ளது எனவும் அளிக்கப்படும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 46% மக்கள் போதைக்கு அடிமை ஆக்கியதற்கான பெருமை அரசையே சாரும். ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என்றவர்கள் அளித்த வாக்குறுதியை மறந்ததின் விளைவாக தற்போது மதுபழக்கம் 7ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் வரை பரவிப் போனது.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டாக கருதப்படும் நெல்லை சீமையில் கடந்த 13 ந்தேதி 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியானது. இத்தகைய பழக்கம் இங்கு என்றில்லை எல்லா பகுதிகளிலும் நடைபெறும் வகையில் போதை பொருட்கள் தட்டுபாடின்றி கிடைப்பதால் இளந்தலைமுறை எளிதில் தவறான பாதையில் தடுமாறும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் பள்ளி மாணவர்கள் அன்றாடம் போதை பொருட்களை பயன்படுத்துவது தெரியவருகிறது. இது எதிர்கால சமூகம் எங்கே செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
மக்களை நல்வழியில் வழிநடத்த வேண்டிய அரசு வருமானத்திற்காக மக்களின் கைகளை பிடித்து கள்ளசாராயம் வேண்டாம் நல்ல சாராயம் நான் தருகிறேன் என கூறுவது சாதனையல்ல வேதனை. பள்ளிகள் பல மூடப்படுகின்றன ஆனால் புதிதாக பல மது கடைகள் அரசால் திறக்கப்படுகின்றன. இதன்மூலம் இளைய சமுதாயத்தை குற்ற சமூகமாக மாற்றி கொண்டிருக்கிறது. மதுவால் உடல்நல பாதிப்பு, விபத்துக்கள், குடும்ப வன்முறை, கொலை,கொள்ளை, பாலியல் பலாத்காரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் அதனை பற்றி கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது மக்களை தவறான பாதையில் அரசே வழிநடத்துவதாகும்.
மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என பாட்டிலில் மட்டும் எழுதி வைப்பதில் என்ன பயன்? எச்சரிக்கை மட்டும் செய்வதே எங்கள் கடமை என கூறும் வகையில் ஒருபுறம் மது விற்பனை செய்துவிட்டு மறுபுறம் போதை இல்லா தமிழகம் என பொய்யான பிரச்சாரம் செய்வது எந்த வகையில் ஏற்றுகொள்வது? இளைய தலைமுறையை, ஏழை குடும்பங்களை, தள்ளாடும் தமிழகத்தை காக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கு என்பதே தற்போதைய தேவை. இதனால் மட்டுமே ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்கிட முடியும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply