சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
குமரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் தவறாது இடம்பிடிப்பது செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்கா. இதனை சொல்லி வாக்கு கேட்பவர்கள் ஜெயித்தபின் இதனை மறந்து விடுவார்கள்.மீண்டும் அடுத்த தேர்தலில் இதே வாக்குறுதி அவர்களது தேர்தல் வாக்குறுதிகளில் தவறாது இடம்பெறும்..உண்மையில் இந்த திட்டம் கைவிடப்பட்டு நாட்கள் ஆயிற்று..இதனை தெரியாமலே அவர்கள் திட்டம் கொண்டுவருவதாக சொல்வதும், பின்னர் அதனை மறந்துவிடுவதும் வாடிக்கையான வேடிக்கை.
செண்பகராமன்புதூரில் என்.எஸ்.கே. பாலிடெக்னிக் அருகாமையில் உள்ள 47.86.16 ஹெக்டேர் நிலம் ரப்பர் பூங்காவிற்கென கையகப்படுத்தப்பட்டது. தங்கள் பகுதியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல பேருக்கு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தாங்கள் விவசாயம் செய்துவந்த நிலத்தினை விவசாயிகள் அளித்தனர். சிப்காட் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு சிப்காட் நிறுவனத்தால் இடம் பார்வையிடப்பட்டது. குறிப்பிட்ட இடம் கற்கள் மற்றும் மேடு, பள்ளமாக இருப்பதால் குறிப்பிட்ட நிறுவனத்தால் மறுக்கப்பட்டு இத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது குறிப்பிட்ட இடம் தனிநபர் ஒருவரின் பராமரிப்பில் உள்ளது.
இந்த நிலத்தினை ஒட்டி குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு பல வருடகாலமாக செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது தற்போது செயல்பாடற்ற நிலையில் உள்ளது. இதுபோல் குறிப்பிட்ட நிலம் வழியாக கடந்து வரும் சாஸ்தான் கோவில் ஓடை, தேரை விளை ஓடை, ஊத்தாங்கரை கிணற்று ஓடை, அத்தி விளை ஓடை, கட்டளை குளத்திற்கு நீர் வரும் தேன் பொத்தை ஓடை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீர்கால்வாய்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டு நீர்வரத்து தடைபட்டு உள்ளது.
கையப்படுத்தப்பட்ட இடத்தில் குறிப்பிட்டநபர் ஈட்டி, செம்மரம், தேக்கு, தென்னை, நெல், உளுந்து, சந்தனமரம் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகிறார். எந்த திட்டத்திற்காக குறிப்பிட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அந்த திட்டம் நிறைவேற்றப்படாத நிலையில் அதில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தலாம். அதைவிட்டு தனிநபர் பயனிற்காக விவசாய விளைநிலங்களை பிடுங்கி தாரை வார்ப்பது ஏற்புடையது அல்ல. எனவே குறிப்பிட்ட நிலத்தினை மீண்டும் நிலம் வழங்கிய விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, விவசாய அணிச் செயலாளர் N.கிருஷ்ணன், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், செண்பகராமன்புதூர் ஊராட்சி செயலாளர் R.சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியர் இது தொடர்பாக உரியவிசாரணை நடத்தும்படி தோவாளை வட்டாட்சியரிடம் உத்தரவிட்டார்.



தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply