சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் புதிதாக 30 மணல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் நவம்பர் 1ம் தேதி முதல்கட்டமாக புதுக்கோட்டை 3, கடலூர்-2, தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என 8 மணல் குவாரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2016ம் ஆண்டு மணல் குவாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவித்தும் பல்வேறு விதிமீறல்களும், முறைகேடுகளும் நடந்தது கண்டறியப்பட்டது. நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் பலமுறை அறிவுறுத்தியும் மணல் மாஃபியாக்களின் அகோர பசிக்கு தமிழக ஆறுகள் இரையாகி வருகின்றன.
இந்நிலையில் மேலும் இத்தகைய கொள்ளைக்கு அரசு துணைபோவதால் இயற்கை வளங்கள் முற்றிலுமாய் சீர்குலையும் நிலையே உள்ளது. நன்னியூர் குவாரியினை பார்த்தாலே விதிமீறல்களும், பாதிப்புகளையும் காணலாம். இதுபோலவே கொள்ளிடம் ஆற்றில் உள்ள குவாரிகளால் உறைகிணறுகள் குலைந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதை பார்க்கலாம். இதுபோலவே ஏனைய குவாரிகளிலும் விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்டு ஆற்றை களவாடி வருகின்றனர்.
இத்தகைய மணல் குவாரிகளால் ஆற்று படுகை அழிந்து நிலத்தடி நீர் சேகரமாவது தடைபடுகிறது. ஆற்றின் கரைகள் உடைக்கப்படுவதோடு, தடுப்பணைகளின் கட்டுமானங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் ஆறுகளின் இயல்பான நீரோட்டம் தடைபடுவதோடு உயிர் பன்மையத்தன்மை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, விவசாயம், சுற்றுச்சூழல் அடியோடு சீர்குலையும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் ஏப்ரல் 26ம் தேதி ஆய்வறிக்கையில் ஒவ்வொரு அரசும் மணலை கட்டுமானத்திற்கு பயன்படும் பொருளாக மட்டும் பார்க்காமல் அதன் சூழல் முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் சேர்த்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வளமாக பார்க்க வேண்டும் என்றும் மணலுக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.தமிழக அரசின் 2023ம் ஆண்டின் எம்.சாண்ட் கொள்கை குறிப்பும் ஆற்றுமணல் பயன்பாட்டை குறைத்து நதிச்சூழலை பாதுகாப்பது என கூறுகிறது.
ஆனால் இவற்றிற்கு நேர் எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் உள்ளது. கட்டுமானத்திற்கு தேவையான மணல் இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தூங்கிகொண்டிருக்கும் நிலையில் ஆறுகளை தாரைவார்ப்பதால் அவை பாலைநிலமாகிப்போகும் ஆபத்தையே எதிர்நோக்கி உள்ளோம்.எனவே இயற்கை வளங்களையும், நீர் ஆதாரத்தையும் காத்திடும் வகையில் புதிய மணல் குவாரிகள் திறப்பதையும், மணல் அள்ளும் முறையினை இயந்திரப்படுத்தி உள்ளதையும் கைவிட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply