சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
இதே நாளில் கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பாக 1964 ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையினை கடந்த போது உருவான ராட்சத அலைகளால் ராமேஸ்வரத்தில் இருந்து 18கி.மீ தொலைவில் இருந்த தனுஷ்கோடி நகரமே நீரில் மூழ்கி உருக்குலைந்து போனது. ஆழிப்பேரலையின் அகோரப்பசிக்கு அங்கிருந்த 2000 பேர் இரையாகினர். சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த போர்ட் மெயில் ரயிலில் பயணித்த 123 பேர் ஜலசமாதியாகினர். பரபரப்பாக இயங்கிய நகரம் அன்று முதல் பாழடைந்த நரகமாகிப் போனது. சொர்க்கத்தின் தாய்வீடாக கருதப்பட்டது புறக்கணிக்கப்பட்ட பேய் காடாக உருமாற்றம் கொண்டது.
வங்காள விரிகுடாவும், இந்திய பெருங்கடலும் முத்தமிடும் இந்திய விளிம்பில் உள்ள இந்நிலபரப்பு வில்லை போன்று வளைந்த கடற்கரையை கொண்டு இருப்பதால் இதனை தனுஷ்கோடி என்று அழைத்தனர். முக்கிய வர்த்தக துறைமுக நகரமாகவும், வணிக மையமாகவும் ஒருகாலத்தில் நடைபெற்ற இப்பகுதி முத்து குளித்தலுக்கு சிறப்பு பெற்றது. தனுஷ்கோடி -இலங்கை தலைமன்னார் இடையே 1914ல் இரு பயணிகள் கப்பல் இயங்கி வந்து உள்ளது. சென்னையில் இருந்து இங்கு ரயில் போக்குவரத்தும் இருந்து உள்ளது.
புயலால் இந்நகரம் கொள்ளையடிக்கப்பட்ட பின்னால் இப்பகுதியினை வாழ தகுதியற்ற பகுதியாக தமிழக அரசு அறிவித்தது. இங்கு சிதிலமடைந்த நிலையில் தேவாலயம், அஞ்சல் நிலையம், ரயில்நிலையம், விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் எஞ்சிய வரலாற்று தடயங்களாக உள்ளன. இப்பகுதிக்கு ரூ 70 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலையினை அமைத்து கடந்த 27.7.2017ல் பாரத பிரதமர். மோடி திறந்து வைத்தார். தற்போது வருடத்திற்கு 2 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலை உள்ளது.
இங்கு குளித்தால் தான் காசி யாத்திரை முடிவு அடைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். மேலும் சிறந்த ஆன்மீக மற்றும் சுற்றுலா தலமாக தனுஷ்கோடி விளங்கும் சூழலில் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. இருப்பினும் இவர்களுக்கான மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு, அவசர மருத்துவ வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து இதுவரை கொடுக்கப்படவில்லை. இதனால் இவர்கள் பாதிக்கப்படும் நிலையே உள்ளது. சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இப்பகுதியினை சுற்றுச்சூழல் சுற்றுலா பகுதியாக அறிவித்து உரிய வசதிகளையும், பாதுகாப்பினையும் மேம்படுத்திட வேண்டும்.
பராமரிப்பின்றி எஞ்சிய நிலையில் உள்ள கட்டுமானங்கள் இயற்கை தாக்கத்தாலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளாலும் வேகமாக சீர்குலைந்து அழியும் தருவாயில் உள்ளது. எனவே காலம் விட்டு சென்ற காலடி தடயங்களை அதன் பழமை குலையாமல் புனரமைத்து பாதுகாத்திட வேண்டும். அழிந்த நகரத்தின் வரலாற்றுச் சின்னங்களை அழியாமல் காத்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply