சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பாயும் கெடிலம் ஆறு திருக்கோவிலூரில் உற்பத்தியாகி மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்றுடன் கலந்து வங்ககடலில் சங்கமிக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே முகலாற்று அணை, புத்தனேந்தல் அணை, திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவயிந்திரபுரம் அணை, கெடிலம் அணை கட்டுப்பட்டு உள்ளன.112கி.மீ பயணிக்கும் இந்நதி பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு அடிப்படையாகவும் அமைகிறது.
மூன்றாம் இராஜராஜனை சிறை வைத்து சோழ பேரரசனை வியக்க வைத்த கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலம் கோட்டை கட்டி ஆண்டது இந்நதி கரையில்தான். தமிழ்மண்ணில் கால்பதித்த ஆங்கிலேயர் முதலாவதாக கோட்டை கட்டியது இந்நதியின் முகத்துவார பகுதியில் தான். தேவாரம், பெரியபுராணம் உள்ளிட்ட பக்தி இலக்கியத்தில் இந்த ஆறு குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஆற்றின் கரையில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், திருவந்தபுரம் தேவநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன.
இவ்வாறு பல்வேறு பெருமைகளின் முகவரியாக திகழும் கெடிலம் ஆறு தற்போது ஆக்கிரமிப்பு மற்றும் தொழிற்சாலை உள்ளிட்டவற்றின் கழிவுநீர் கலப்பால் மாசுபட்டு தனது இயல்பான முகத்தை இழந்து தவிக்கிறது. சர்க்கரை ஆலைகளின் ரசாயன கழிவுநீர் இந்த ஆற்றில் கலந்து வரும் நிலையில் கம்மியம்பேட்டை பகுதி தடுப்பணையில் சேகரமாகி கருப்பு நிறத்தில் காட்சி அளிப்பதோடு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இதன் சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீர் வெகுவாக பாதிப்பு அடைந்து உள்ளதோடு மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது. மேலும் விவசாய விளைநிலங்களும் பாழானது. இப்பகுதியில் நீரின் அபாயத்தை வெளிப்படுத்தும் விதமாய் மீன்கள் இறந்து மிதக்கின்றன.
ஆற்று நீரில் காரீயம், நிக்கல், மாங்கனீசு போன்ற கன உலோகங்களின் செறிவால் இதனை பயன்படுத்துவோர் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் சூழலில் இதனால் சுற்றுசூழலும் வெகுவாய் பாதிப்பு அடைந்து உள்ளது. ஆற்றின் கரைகளில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் ஆற்றின் நீர் ஓட்டத்தை தடுப்பதால் வெள்ளகாலங்களில் உடைப்பு ஏற்படும் அவலம் உள்ளது. அணைகள் மற்றும் தடுப்பணைகள் தூர்வாரப்படாமலும், பழுதடைந்த நிலையிலும் உள்ளதால் நீரை போதிய அளவில் சேமிக்க முடிவதில்லை. மேலும் கரைகள் பலப்படுத்தப்படாததால் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பல கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும், விவசாயத்திற்கு அடிப்படை தேவையாகவும் இருக்கும் கெடிலம் ஆறு ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, கழிவுநீர், குப்பைகள் பெருக்கத்தால் தனது ஜீவனை இழந்து, வரலாற்று பெருமையினை இழந்து வாடி நிற்கிறது. கெடிலம் ஆற்றை கூவம் ஆற்றாக மாற்றிய குற்றவாளிகள் நாம்தான்.. நாகரீகத்தின் தொட்டிலாக விளங்கும் நதிகள் இயற்கை அன்னையின் இரத்த நாளங்கள்.எனவே அதனை பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமை. எனவே கெடிலம் ஆற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியம்..
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply