ஆரல்வாய்மொழி- பொய்கை அணை 2000ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 42.62 அடியாகும். அனண கட்டப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021 நவம்பர் மாதம் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் ஆற்று மதகு மூலம் கரும்பாட்டுகுளம், தோவாளை பெரியகுளம், பொய்கைகுளம், குட்டிகுளம், ஆரல்வாய்மொழி பெரியகுளம், வைகைகுளம், கிருஷ்ணன் குளம், செண்பகராமன்புதூர் பெரியகுளத்திற்கு நீர் விநியோகம் செய்யபடுகிறது.
இது போல் கால்வாய் மதகு வாயிலாக கீழ பாலார் குளம், பழவூர் பெரியகுளம், அன்னுவத்தி குளம், லெட்சுமி புதுகுளம், அத்திகுளம், சாலை புதுகுளம், தெற்கு சிவகங்கை குளம், மேல பாலார்குளம் ஆகிய குளங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொய்கை அணை மூலம் 1,357 ஏக்கர் பரப்பளவு விவசாய விளை நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் குமரி மற்றும் நெல்லை மாவட்ட பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் கடந்த மாதம் 18 ந்தேதி கால்வாய் மதகு குமரி மாவட்ட ஆட்சித் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது.
விநாடிக்கு 30 கனஅடி வீதம் நீர் இக்கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்டு தற்போது நீர் செல்கிறது. ஆனால் இக்கால்வாய் வழியாக செல்லும் நீர் முழுமையாக குளங்களுக்கு செல்லாத நிலையே உள்ளது. காரணம் பொய்கை அணையில் இருந்து செல்லும் நீர் வழியில் உள்ள சேதமடைந்த கால்வாயின் பகுதிகள் வழியாக பெருமளவில் வெளியேறி விரயமாகிறது. இதனால் இக்கால்வாய் மூலம் பாசனம் பெறும் 450.23 ஏக்கர் நிலங்கள் நீர் எட்டாத நிலையில் பயனின்றி தவிக்கும் நிலையிலே உள்ளது.
குறிப்பிட்ட பாசன கால்வாயில் உள்ள பழுதுகளை சீரமைக்க துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நீரை திறந்து விட்டதால் எவ்வித பயனும் இன்றி அணை நீர் விரயமாகி உள்ளது. எனவே எந்த நோக்கத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில் விவசாயிகள் பாதிப்பினையே எதிர்நோக்கி உள்ளனர். அணையினை திறப்பதில் காட்டிய ஆர்வத்தில் ஒரு சிறிய அளவையாவது கால்வாய் பழுதுகளை சீரமைப்பதில் காட்டி இருந்தால் இந்த அவலம் ஏற்பட்டு இருக்காது. ஆகவே விவசாயிகள் பலன்பெறும் வகையில் குறிப்பிட்ட பாசன கால்வாய் பழுதுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை துரிதகதியில் எடுக்கும்படி சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் E சுரேஷ், விவசாய அணிச் செயலாளர் N.கிருஷ்ணன், சுற்றுசூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் CV.முருகன், நெல்லை மாவட்ட தலைவர் P.சுப்பிரமணியன், மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.















Leave a Reply