பார்த்தீனியம் எனப்படும் ஆக்கிரமிப்பு களைச்செடி அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. கடந்த 1950களில் கோதுமை இறக்குமதி செய்ததின் மூலம் இந்தியாவில் பரவியது. இன்று தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் 42 மில்லியன் ஏக்கர் நிலத்தை இச்செடி ஆக்கிரமித்து உள்ளது. எல்லா காலநிலைகளிலும், எல்லா பகுதிகளிலும் எளிதில் இவை பரவக் கூடியது. இதனால் விளைநிலங்கள், ரயில்பாதைகள், நீர்நிலைகள், தரிசு நிலங்கள் என எங்கும் இவை வளர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.
அதிகபட்சமாக 4 அடி வரை வளரும் இச்செடிகள் வளரும் போது மண்ணில் நச்சு அமிலங்களை வெளிப்படுத்துகின்றன. இதனால் மண்வளம் கெடுகிறது. இத்தாவரம் ஏனைய தாவரங்களை வளர விடாமல் தடுக்கின்றன. இதனால் பயிர் உற்பத்தி 40% குறைகிறது.இவை தன் வாழ்நாளில் 624 மில்லியன் மகரந்தத்தையும் 15000 விதைகளையும் உற்பத்தி செய்கின்றன. இவற்றின் விதைகள் 20 ஆண்டுகள் வரை மண்ணில் உறங்கி ஏற்ற சூழ்நிலை வரும்போது முளைக்கும் திறன் கொண்டவை.
இவற்றின் மகரந்தம் மூலம் சரும அரிப்பு, சொறி,கரப்பான், ஆஸ்துமா, ஒவ்வாமை (ஈசினோ பீலியா) போன்றவை மனிதர்களுக்கு ஏற்படுவதோடு இதனை உண்ணும் கால்நடைகள் இவற்றின் நச்சுத்தன்மையால் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது.மூக்குத்தி பூச்செடி, கரட் புல், மல்லிக் கிழங்கு புல், கசப்புச்செடி என பல்வேறு பெயர்கள் இதற்கு இருப்பினும் இதன் பலன் என்பது தீமையை தவிர வேறில்லை. எனவே தான் சீமை கருவேலை விட சுற்றுசூழலுக்கு ஆபத்துமிக்கதாக பார்த்தீனியம் செடி கருதப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த 2012ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஏரி, குளங்கள், புறம் போக்கு நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் பார்த்தீனியம் செடிகளை முழுமையாக அகற்றிட உத்தரவிட்டார்.அதன்படி எல்லா மாவட்டங்களிலும் இதனை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தொடர் நடவடிக்கைகள் இல்லாத நிலையில் மீண்டும் பார்த்தீனியம் செடிகள் எங்கும் பரவியது. மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகளை முழுமையாக ஒழித்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திடவேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் பேரா. C. மோகன், பொருளாளர் S. மைக்கேல்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், விவசாய அணித்தலைவர் N.கிருஷ்ணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் C.V. முருகன், மகளிர் அணி செயலாளர் R. சாராபாய் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply