சமூக பொதுநல இயக்கம் புகார் –
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவி மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம் என்பதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். இவர்கள் வரும் வாகனங்களுக்கு என திற்பரப்பு பேரூராட்சி நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு உரிய பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் வாகனங்களை திற்பரப்பு அருவிக்கரை ஓரமாக திருவரம்புவழியாக திருவட்டார் செல்லும் சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.
இச்சாலை வழியாக அருமனை, திருவட்டார், களியல், கடையாலுமூடு, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் சென்று வருகின்றனர். மேலும் மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம், கடையாலுமூடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் வழித்தடமாக இச்சாலை உள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் இந்த சாலையினை ஆக்கிரமித்து நிற்பதால் இவ்வழியாக போக்குவரத்து தடைபடுவதோடு பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
இப்பகுதியில் தனியார் போக்குவரத்து நிறுத்துமிடம் உள்ளது. ஏற்கனவே நுழைவு கட்டணம் செலுத்திய நிலையில் மீண்டும் இங்கும் இவர்கள் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. அதிலும் இங்கு போதிய இடம் இல்லாததால் அதிகமான வாகனங்களை இங்கு நிறுத்த இயல்வதில்லை. இதனால் தற்போது சாலையே பார்க்கிங் பகுதியாக இங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.கட்டணத்தினை வசூலிப்பதில் தீவிரம் காட்டிவரும் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு உரிய வசதியினை செய்து கொடுப்பதில் அலட்சியம் காட்டி வருவதால் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது போலவே சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படாத நிலையில் இங்கு இன்ப சுற்றுலாவிற்கு வருவோர் துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியினை ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர்
T.குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, மனநல பாதுகாப்பு அணிசெயலாளர் S. அருள்ராஜ்,தியாகிகள் புகழ்பரப்பு அணி செயலாளர் C. டைட்டஸ், திருவட்டார் ஒன்றிய செயலாளர்
Y. மரியசெல்வன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply