சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பராமரிப்பின்றி பாம்புகள் சரணாலயமான முப்பந்தல் துணை மின்நிலையம்..உயிர் பயத்தில் தவிக்கும் கிராமம்.சமூக பொதுநல இயக்கம் புகார்-

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட முப்பந்தல் பகுதியில் துணை மின்நிலையம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகளை பராமரிப்பின்றி விட்டு உள்ளனர். இதனால் இங்கு கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த முட்புதர்காடுகளாக காட்சி அளிக்கிறது. இக்காடுகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் சரணாலயமாக திகழ்கிறது.

இதனை ஒட்டி கண்ணு பொத்தை காலனி குடியிருப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த முட்புதர்களில் வசிக்கும் பாம்புகள் இக்கிராமத்தில் அடிக்கடி படை எடுக்கின்றன. இங்கு தெருவிளக்குகள் இல்லாத நிலையில் பாம்புகளால் இவர்கள் தாக்கப்படும் ஆபத்து உள்ளதால் கிராம மக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதுபோல் குறிப்பிட்ட பகுதியினை விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் பீதியுடன் கடந்து செல்லும் சூழலே உள்ளது.

இதையொட்டி லெட்சுமி புதுக்குளம் உள்ளது. இங்குள்ள கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதால் நீர்நிலையில் நீர் தேங்காத நிலை உள்ளது. இதனால் இதன் சுற்றுவட்டார பகுதியில் ஆழ்குழாய்கிணறுகளில் உள்ள நீர் வற்றும் நிலையில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. மேலும் விவசாயமும் அடியோடு பாதிக்கப்படும் பரிதாப நிலையே ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இப்பகுதி மக்கள் குறிப்பிட்ட துறையினரிடம் முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளாத நிலையில் கண்ணு பொத்தை காலனி மக்கள் தொடர்ந்து விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவே சுற்றுசூழலுக்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும், கிராம மக்களுக்கும் பாதிப்பை உருவாக்கிடும் வகையில் உள்ள கருவேல மர புதர்காடுகளை வெட்டி அகற்றிடும் படி சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர்T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தொழில்நுட்ப அணி செயலாளர் E.சுரேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் M.மரிய அற்புதம், செயலாளர் Y.ராகுல் ஆரல்வாய்மொழி பேரூர் தலைவர் D.சகாய பிரிட்டோ, அமைப்பு செயலாளர் S.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *