சமூக பொதுநல இயக்கம் புகார் –
குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி தொடங்கி ஆறுகாணி வரை பரந்து விரிந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு ஆறுகள் மாவட்டத்தை வளப்படுத்துகின்றன. குறிப்பாக பழையாறு, வள்ளியாறு, தாமிரபரணி கடலில் கலக்கும் ஆறுகளாகும். இந்த ஆறுகளில் தூவாறு, நந்தியாறு, முல்லையாறு, கோதையாறு, மாம்பழத்தாறு உள்ளிட்ட சிற்றாறுகள் கலக்கின்றன.
குமரி மாவட்டத்தின் முக்கிய நதியான தாமிரபரணி என்பது கோதையாறு, பரளியாறு, நந்தியாறு, முல்லையாறு போன்ற ஆறுகளின் நீர் தொகுதியாகும். இதில் பரளியாறு மகேந்திரகிரி மலையில் மேற்கு சரிவில் துவங்கி தென்மேற்காக பாய்ந்து பெருஞ்சாணி அணையினை வந்து அடைகிறது. அதன்பின் அருவிக்கரை, வலியாற்றுமுகம் வழியாக பயணித்து மூவாற்று முகத்தில் கோதையாற்றுடன் சங்கமித்து அதன் பின் தாமிரபரணியாக உருக்கொள்கிறது.
இந்நிலையில் பரளியாறு எழில் அழகோடு பாய்ந்து வருவதோடு அதனை சார்ந்த பகுதிகளையும் செழிப்பாக்குவதோடு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. இந்த ஆற்றின் கரையோரப்பகுதிகள் பெருமளவில் ஆக்கிரமிப்பாளர்களின் அகோரப் பசிக்கு இரையானதால் இதன் பரப்பு குறுகி அடிக்கடி வெள்ள பாதிப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக வலியாற்றுமுகம் முதல் அருவிக்கரை வரையிலான 5கி.மீ தூரம் பரளியாறு பெருமளவில் ஆறு விழுங்கி மகாதேவன்கள் பிடியில் உள்ளது.
இப்பகுதியில் தென்னை உள்ளிட்ட மரங்களை வைத்து ஆற்றை கபளீகரம் செய்து உள்ளதோடு இவர்கள் மக்களை இப்பகுதியில் அனுமதிப்பது இல்லை. இதனால் மலைவிளை கிராம மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால் ஆற்றின் நீரோட்டம் தடைபடுவதோடு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகும் செயற்கை ஆபத்தை உருவாக்கி வருகின்றனர். எனவே பரளியாற்றில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ்,செயலாளர் P.சந்திரா,மனநல பாதுகாப்பு அணிசெயலாளர் S. அருள்ராஜ், விவசாய அணி செயலாளர் N.கிருஷ்ணன், திருவட்டார் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply