சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பனைமரங்கள் வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்- அரசின் உத்தரவு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு-

panai-vetta-arasu-uttharavu-samugam-varaverpu

தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனைமரம் அதன் அடிமுதல் முடி வரை ஒவ்வொரு பாகமும் மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுவதால் அதனை கற்பகதரு என்று அழைக்கின்றோம். பனையின் ஓலையின் மூலமே சுவடிகளாய் நமது இலக்கியங்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டன. சோழ மன்னர்கள் தங்கள் பொற்காசுகளில் அடையாள சின்னமாய் பனைமரத்தை பதித்தனர். இதன் பெருமை கருதி பாரிமன்னன் தனது சின்னமாக பனைமரத்தை வைத்து இருந்தான்.

உலகின் மூத்தகுடியான தமிழ் குடிக்கும், பனைமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் கடல் அரிப்பு மற்றும் மண் அரிப்பு ஏற்படாதவாறு அரணாக நின்று காப்பதோடு நிலத்தடி நீரை பாதுகாத்து சுற்றுச்சூழலுக்கும், கிராம பொருளாதாரத்திற்கும் பெரும்பங்காற்றி வந்த இம்மரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு மனிதகுலத்திற்கும்,உயிரினங்களுக்கும் மிகுந்த நன்மை தரும் பனைமரங்களை பாதுகாக்கவும், அழிக்கப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி பனைமரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரகன்றுகள் நடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வட்டார அளவிலான குழு பனைமரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் கூட்டாக கிராமம் வாரியாக இருப்பு பதிவேட்டை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெட்டப்படும் மரங்களின் பாகங்களை எடுத்து செல்லும் போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் மூலம் வழங்கப்பட்ட அனுமதிகடிதத்தை காண்பிக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. பனைமரத்தை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பெருகவும், அழிவில் உள்ள பனைமரங்களை காக்கவும் அரசின் இத்தகைய நடவடிக்கை நிச்சயமாய் உதவும் என நம்புகின்றோம். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதோடு, அதனை பாதுகாப்பது நமது கடமை என்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திடவும் அரசு தீவிரமுனைப்பு காட்டிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *