சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையில் மிஞ்சியுள்ள ஒரே இயற்கை ஈரநிலப்பகுதியாகும். இங்குள்ள 1247 ஹெக்டேர் நிலத்தில் 700 ஹெக்டேர் பாதுகாக்கபட்ட வனப்பகுதியாக வனத்துறை பராமரிப்பில் உள்ளது. மீதி உள்ள 547 ஹெக்டேர் நிலம் அரசின் பாதுகாப்பில் உள்ளது. கடந்த 2022 ஏப்8 ந்தேதி இந்நிலத்திற்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்தது. இத்தகைய நிலங்களில் ஈரநிலங்கள் விதிகள் 2017ன்படி எந்தவொரு கட்டுமானப்பணிகளும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது
சென்னையின் நுரையீரல் எனவும், வெள்ளத்தை தாங்கும் பாதுகாப்பு அரண் எனவும் போற்றப்படும் இத்தகைய நிலங்கள் மழைநீரை சேமிப்பதிலும், நிலத்தடி நீரை உயர்த்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றன. கடும்மழை அல்லது புயல் காலங்களில் வெள்ளத்தை கட்டுபடுத்துவதில் இவை பெரும்பங்களிப்பு அளிக்கின்றன. பல்வேறு உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் சரணாலமாக திகழும் இப்பகுதி உயிர் பன்மயத்தின் தாயகமாக அமைந்து உள்ளன.
இத்தகைய பெரும் சிறப்பு பெற்ற இப்பகுதியில் 14.7 ஏக்கர் நிலத்தில் ரூ 2000 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இத்திட்டத்திற்கு என விண்ணப்பித்த நிறுவனம் தங்களது நிலம் சதுப்புநிலத்தில் இருந்து 1.2கி.மீ தொலைவில் இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த நிலம் சதுப்புநிலப்பகுதியிலேயே உள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால் சதுப்புநிலப் பகுதி முற்றிலுமாய் பாதிப்பிற்கு உள்ளாவதுடன் இங்குள்ள இயற்கை சூழல் கடுமையாக நிர்மூலம் ஆகும் நிலை உள்ளது. சென்னையின் வெள்ள அபாயம் மேலும் அதிகரிக்கும். மேலும் இங்கு குடியிருப்புகள் கட்டி குடியிருப்போர் ஒவ்வொரு மழைக்கும் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையே ஏற்படும். சதுப்புநிலத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் இத்தகைய செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
சதுப்பு நிலங்களை காப்போம் என ஒருபுறம் கூறும் தமிழக முதல்வர் மறுபுறம் அதனை பலி கொடுக்கும் விதமாய் செயல்படுவது இயற்கைக்கும், எதிர்காலத்திற்கும் செய்யும் துரோகமாகும். எனவே குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கட்டுமான பணிகளுக்கு வழங்கபட்ட அனுமதியை ரத்து செய்வதோடு, சட்டவிரோதமாக ராம்சார் நிலத்தில் பணிகளுக்கான அனுமதி அளித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசர அவசியம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.















Leave a Reply