சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஓர் நிறுவனம் கடந்த 2024 ல் இதற்கான பணியை துவங்கிய போது மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த கருத்து கேட்புக்கூட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த ஆலை கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் சுற்றுவட்டார 13 மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்படும். இதில் இருந்து வெளியாகும் நச்சுக்காற்றால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு மூச்சுதிணறல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் ரசாயனம் கலந்த கழிவுநீர் குடிநீர் ஆதாரங்களில் கலப்பதால் குடிநீர் பாதிப்பிற்கு உள்ளாவதோடு விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் சீர்குலையும். இதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் அவலத்தை எதிர்நோக்கி உள்ளன.
விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளம் பகுதியில் இதுபோல் கடந்த 2006ல் மருத்துவ கழிவுசுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட்டது. இதையடுத்து இதன் சுற்றுவட்டார பகுதி12 கிராம மக்கள் சுவாச கோளாறு, நுரையீரல் பாதிப்பு, கரு சிதைவு, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகினர். இதனால் 100க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். இதைத் தொடர்ந்து கிராம மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு பின் கடந்த 2015ல் குறிப்பிட்ட ஆலை மூடப்பட்டது.
மானாமதுரையில் ஆலை அமையும் இடத்தின் அருகே பள்ளி மற்றும் கிராமங்கள் அமைந்து உள்ள நிலையில் ஏ.முக்குளம் போலவே இப்பகுதியிலும் பாதிப்புககள் ஏற்படும் என்பதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் புதைக்கப்படும் கழிவுகளால் முக்கிய நீர் ஆதாரமான வைகை ஆறு மாசுபடுவதோடு, குடிநீர் மற்றும் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் நிலையினை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
எனவே பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சுற்றுசூழலுக்கும் , நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் எதிரான குறிப்பிட்ட ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியினை அரசு ரத்து செய்திட வேண்டும். இதையொட்டி தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றாது என சமீபத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார். அதனை நிரூபிக்க வேண்டியது அரசின் நடவடிக்கையிலேயே உள்ளது.
தலைமைச் செயலகம்.
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply