சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சிறுவர் முதல் பெரியோர் வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான நிலையில் சமூகத்தில் போதைப் பழகத்தைப் போன்று பரவி பலருக்கு பொருளாதார இழப்பு,மன அழுத்தம், தற்கொலைக்கு இவை காரணமானது. ஆன்லைன் சூதாட்டங்களால் ஆண்டுதோறும் 45 கோடி பேர் 20000 கோடி ரூபாய் வரை இழப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் 2022. அக்டோபரில் சட்டமன்றத்தில் நிறைவேறியது. 2023 ஏப் 10ல் கவர்னர் இதற்கு ஒப்புதல் அளித்தார். ஏப்11ல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. இருப்பினும் நீதிமன்ற வழக்குகளால் இச்சட்டத்தினை சரிவர செயல்படுத்திட இயலவில்லை. இதுபோல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களும் இத்தகைய சூதாட்டங்களுக்கு தடை விதித்து உள்ளது. இச்சட்டத்தினை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பாக இருந்தது.
இச்சூழலில் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா இம்மாதம் 20 ந்தேதி கொண்டுவரப்பட்டு 3 நாட்களில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்து உள்ளது. இதையொட்டி ஆன்லைன் நிறுவனங்கள் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் என்றெல்லாம் திசை திருப்ப முயன்றனர். இருப்பினும் சமூக சீர்கேட்டிற்கு காரணமான ஆன்லைன் சூதாட்டத்தினை தடைசெய்திடும் நோக்கில் சட்டம் இயற்றிய மத்திய அரசின் முடிவை வரவேற்கின்றோம்.
இச்சட்டத்தின்படி ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.சூதாட்ட செயலிகளை பிரபலங்கள் விளம்பரபடுத்த தடை, செயலிகளை தடைசெய்வது உள்ளிட்டவை அமலுக்கு வந்து உள்ளது. மேலும் விதிகளை மீறி விளம்பரம் செய்தால் இரு ஆண்டுகள் சிறை 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மீண்டும் செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை 2 கோடி வரை அபராதம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வங்கிகள், நிதிநிறுவனங்கள் அதனை அனுமதிக்க கூடாது.என மேற்படி சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் சமூக, பொருளாதார, உளவியல் ரீதியான தீமைகள் தடுக்கப்படும். மேலும் ஆன்லைன் நிறுவனங்களின் நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில் மாற்றுமுறையில் செயல்படுகிறார்களா? என்பதையும் தொடர்ந்து அரசு கண்காணிக்க வேண்டியது அவசியம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply