சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
குமரி மாவட்டம் களியல் அருகே
ஐத்துளி மலையில் உற்பத்தியாகி மாங்கோடு, புலியூர் சாலை, அண்டு கோடு, இடைக்கோடு, பாகோடு வழியாக பாய்ந்து திக்குறிச்சி பகுதியில் தாமிரவருணியாற்றில் கலக்கிறது முல்லையாறு. இந்த ஆற்றில் மாலைக்கோடு அருகே பல்லிக் கூட்டம் என்ற இடத்தில் தடுப்பணை அமைத்து இடது மற்றும் வலது கரை கால்வாய்கள் அமைத்தால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் இங்கு தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
விளவங்கோடு வட்டத்திற்கு பாசனம் அளிக்கும் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் விடுவதை கேரளம் கடந்த 2004ல் நிறுத்திவிட்ட நிலையில் இப்பகுதி வறண்டு வருகிறது. இந்நிலையில் முல்லையாற்றில் தடுப்பணை கட்டி சுமார் ஒருகி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்து நெய்யாறு இடதுகரைக்கால்வாயின் கிளைக்கால்வாயான முல்லையாறு கிளைக்கால்வாயில் இணைத்தால் நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் பாசன பகுதிக்கு முல்லையாற்று நீரை வழங்க இயலும். இத்திட்டம் நெய்யாறு இடதுகரை கால்வாயிற்கு மாற்று திட்டமாக அமையும்.
இதன்மூலம் நெய்யாறு இடதுகரை பாசன பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயருவதோடு இப்பகுதி விவசாயமும் மேம்படும். மேலும் தடுப்பணையின் வலது கரையில் கால்வாய் அமைத்து மஞ்சாலுமூடு சுற்றுவட்டார பகுதிகள் பயன் அடைய செய்யலாம் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் முல்லையாற்றில் பல ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு நீர்வளத்துறை அளித்த பரிந்துரையின் பேரில் 24.3.25 அன்று தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அமைச்சர்.துரைமுருகன் முல்லையாற்றில் ரூ 3 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார். இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நெய்யாறு இடதுகரை கால்வாயில் நீர் வராத நிலையில் இத்திட்டம் தங்களுக்கு வரபிரசாதமாக அமையும் என விளவங்கோடு வட்டார பகுதி விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் இத்திட்டம் ஏன் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.அரசு ஆணை ஏன் வெளியிடப்படவில்லை என துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு இத்திட்டம் அரசால் கைவிடப்பட்டதாக கூறுகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டும் நடைமுறைக்கு இத்திட்டம் வராத நிலையினால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் உள்ளதால் குறிப்பிட்ட திட்டம் நிராகரிக்கப்பட்டதாக காரணம் கூறப்படுகிறது. இத்திட்டத்தின்மூலம் இப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன்பெறும் என எதிர்பார்த்த நிலையில் இதனால் மீண்டும் பாதிப்புகளையே சந்திக்க வேண்டி உள்ளது. விவசாயிகளின் கவலைகளை களைய முன்வருமா தமிழக அரசு?
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply