கி.பி.10ம் நூற்றாண்டு காலத்தில் பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பினை குறிப்பாக இன்றைய அகஸ்தீஸ்வரம்,தோவாளை தாலுகா பகுதியான நாஞ்சில் நாட்டை ஆயி வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். நீர்வளமும், நிலவளமும் கொண்ட இப்பகுதிகள் மற்ற நாட்டவரை கவர்ந்தது. இதனால் போர் தொடுப்புகளும், கொள்ளை கும்பல்களின் படை எடுப்புகளும் தொடர்ந்தது. இதனால் நுழைவாயிலான ஆரல்வாய்மொழி பாதையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தினை உணர்ந்தனர். எனவே இங்குள்ள இரு பகுதியிலும் அரணாக நிற்கும் மலைகளை இணைத்து மண்கோட்டை அமைத்தனர். இது கரைக்கோட்டை எனவும் ஆரல்வாய்மொழி நெடுஞ்சுவர் எனவும் அழைக்கப்பட்டது. பின்னர் கி.பி 851-855 ஆயி மன்னர் கருணானந்தகன் காலத்தில் கோட்டை புனரமைக்கப்பட்டது. அதன் பின் கி.பி.855-925ல் 2ம் ராஜசிங்கன் ஆட்சி காலத்துடன் ஆயி வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
கி.பி.1310ல் வேணாட்டு அரசர் ஆதித்யவர்மன் ஆட்சியில் இக்கோட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தபட்டது.கி.பி 1729ல் திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்டவர்மா ஆட்சி பொறுப்பேற்றதும் குறுநில மன்னர்களை எல்லாம் ஒருங்கிணைத்ததுடன் பாண்டியநாட்டு படையெடுப்பை தடுக்க வலுவாக கோட்டை தேவை என்பதால் கடுக்கரை முதல் ஆரல்வாய்மொழி, மருந்து வாழ் மலை, பரமார்த்த லிங்கபுரம் வழியாக கோவளம் வரை 20கி.மீ தொலைவிற்கு கோட்டை சுவர் எழுப்பினர். இந்த அரண்களின் இடையிடையே பீரங்கிகளை நிறுவுவதற்கான கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. அரணின் சுவரானது வெட்டுகற்கள் மற்றும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டது. கோட்டை 25 அடி உயரம் கொண்டதாகவும் 18 அடி அகலம் கொண்டதாகவும் அமைக்கபட்டது. இருபுறமும் 7 அடி உயரத்திற்கு கருங்கற்களை கொண்டும் அமைக்கப்பட்டது. மறுபுறம் அகழியும், இதைதொடர்ந்து முட்காடுகளும் ஏற்படுத்தபட்டது.இந்த அரண் கட்டபட்ட காலத்தில் கன்னியாகுமரி திருவிதாங்கூர் எல்லைக்குள் இல்லை.
எனவேதான் திருவிதாங்கூர் எல்லையாக இருந்த கோவளம் வரை இந்நெடுஞ்சுவர் எழுப்பபட்டது.கி.பி 1765ல் மதுரை ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி ஆங்கிலேயர்களின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையால் திருவிதாங்கூருக்கு மாறியது. தென்தமிழகம் முழுமையாக ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் திருவிதாங்கூருக்கு எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் போனதால் இந்த அரணும் பயன்பாடு இல்லாமல் போனது.கி.பி 1741ல் டச்சு கிழந்திய படையினை குளச்சல் நடைபெற்ற யுத்தத்தில் திருவிதாங்கூர் படைகள் தோற்கடித்த வரலாற்றில் இந்த அரண் முக்கிய பங்காற்றி உள்ளது. இதனை திருவிதாங்கூர் அரண் என ஐரோப்பியர்கள் தங்கள் ஆவணங்களில் பதிவு செய்து உள்ளனர். சீனப்பெருஞ்சுவர் போல் படை எடுப்பினை தடுப்பதற்காக கட்டப்பட்ட குமரி பெருஞ்சுவர் வரலாற்று சின்னம் மட்டும் அல்ல. குமரியின் வீரத்தினை, தமிழ்நாட்டு வரலாற்றினை, கலாச்சாரத்தினை வெளிப்படுத்திடும் அடையாளமாகும்.
ஆரல்வாய்மொழி ஊருக்கான பெயர்காரணமும் இக்கோட்டை வழிவந்தது. கோட்டை (அரண் மருவி ஆரல் ஆனது) வாயிலில் உளவாளிகளை கண்டறியும் பொருட்டு .”ஆரைவாய்மொழி கோட்டையிலே உழக்காழாக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்” என சொல்ல சொல்வர். ழ மற்றும் ள போன்ற வார்த்தைகளின் உச்சரிப்பை வைத்து சோதிக்கும் முறை இருந்ததே இந்த ஊருக்கான பெயர் வர காரணம் ஆயிற்று என்கின்றனர்.
காலப்போக்கில் இச்சுவர் பெருமளவில் அழிந்து போனாலும் இன்னும் பல இடங்களில் கம்பீரம் குறையாமல் மிஞ்சியவை நிமிர்ந்து நிற்கிறது. ஆரல்வாய்மொழி, மருங்கூர், கோட்டையடி, பரமார்த்த லிங்கபுரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் எச்சங்கள் இன்றும் மிச்சமிருக்கிறது. தமிழகத்தில் எந்த குறுநில அரசின் எல்லையிலும் இதுபோல் அரண்கள் எழுப்பவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் குமரி பெருஞ்சுவரை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதனை Heritage wall என பெயரிட்டு எஞ்சிய பகுதிகளை வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும். கண்டுகொள்ளப்படாத நிலையில் புதருக்குள் புதைந்த இப்பொக்கிஷத்தினை வாழும், வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்துவதோடு பராமரித்து, பாதுகாத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தொழில் நுட்ப பிரிவு செயலாளர் E சுரேஷ், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய், சுற்றுசூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் CV முருகன், சமூக சீர்திருத்த அணிச் செயலாளர் பொன்.மாரியம்மாள், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், ஆரல்வாய்மொழி பேரூர் அமைப்பு செயலாளர் S.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply