சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கடந்த 1997ல் உலக மீனவர் மன்றம் தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் நவம்பர் 21 உலக மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அரசின் திட்டங்களாலும், சூழலியல் மாற்றத்தாலும், காடல் மாசடைந்து, மீன்வளம் குன்றி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களது உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் நாளாகவே இதனை கருதவேண்டும். 7516 கி.மீ நீளமுள்ள கடற்கரையினை கொண்டிருக்கும் இந்தியாவில் 1076 கி.மீ கடற்கரையினை தமிழகம் கொண்டு உள்ளது. மீன்பிடித்தொழிலில் இந்தியாவில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. இருந்தும் இவர்களது கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் கால வாக்குறுதிகளாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்படுவது, தொடர்கைது, படகுகள் பறிமுதல், உயிர் இழப்புக்கள் கடல் அலை போலவே தொடர்நிகழ்வாகிப்போனது. மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை பாதுகாக்க 1974ல் இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு எடுப்போம்.மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்போம். மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்போம். டீசல் மானியத்தை உயர்த்துவோம்.. என்பது எல்லாம் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளன.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும், ஆபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் கடல் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும், புயல் எச்சரிக்கை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அவற்றை அறிந்து கொள்ள அதிநவீன கருவிகளை மீனவர்களுக்கு வழங்கிட வேண்டும் என 72கி.மீ நீளமுள்ள கடற்கரையினை கொண்ட குமரி மீனவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியும் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.
மீன்வள உற்பத்தியை அதிகரிக்கவும், மீனவர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் தேசிய மீன்வளர்ச்சி வாரியம் (NFDB) மீன்வள ஆதாரங்களை ஆய்வு செய்து மீனவர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்தில் இந்திய மீன்வள ஆய்வு அமைப்பு (FISI) தமிழகத்தில் மீன்வளத்துறை அலுவலகம் உள்ளிட்டவை மீனவர் நலனிற்காக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் மீனவர்களின் பிரச்னைகளை இவற்றால் நீக்க முடியாத நிலையால் பாதிப்புகளும் பரிதவிப்பும் தொடர்கதையாக உள்ளது.
மீனவர்களின் நலன்,உரிமை மற்றும் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்திடும் விதமாய் தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதனை கொண்டு வருவோம் என 2014ல் பா.ஜ.க /தேர்தல் தோறும் தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தும் இது நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளது. இத்தகைய ஆணையம் அமைக்கப்பட்டால் மீனவர்களது பாதுகாப்பு/மீன்பிடி உரிமை/சர்வதேச சர்ச்சைகள் போன்றவற்றை தீர்க்க இயலும். இதனால் இந்தியாவில் உள்ள 2.8 கோடி மீனவர்கள் பயன்பெறுவர். மீனவர் உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் இந்நாளில் அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்திட ஆட்சியாளர்கள் தேசிய மீனவர் ஆணையத்தினை ஏற்படுத்திட வேண்டியது அவசர தேவையாகும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply