சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உற்பத்தியாகி வழியில் பரட்டையாறு, தாமரையாறு ஆகிய துணை ஆறுகளையும் இணைத்துக் கொண்டு திருக்குறுங்குடி, ஏர்வாடி, திருமலஞ்சி, ராஜாக்கமங்கலம், சித்தூர், ஆற்றங்கரை பள்ளிவாசல் வழியாக 45கி.மீ பயணித்து உவரி அருகே கடலில் கலக்கிறது நம்பியாறு. புஞ்சை நிலத்தை பூக்க வைத்த இந்த ஆறு இன்று தடம் தெரியாமல் புதைந்து போனது.
சித்தூரின் பங்குனி உத்திரமும், ஆற்றங்கரை பள்ளிவாசலின் கந்தூரி வழிபாடும் இந்த ஆற்றில் களைகட்டும். மணலால் சூழ்ந்த நதி கோடையிலும் மக்களின் தாகத்தை தணித்தது. நிலத்தடி நீரை தேக்கி விவசாயம் செழிக்க சாட்சியாய் இருந்தது. மணல் கொள்ளையர்களின் கண்ணில் பட்டதால் ராதாபுரம், கோட்டை கருங்குளம், திருவெம்பலாபுரம், உறுமன்குளம், விளாத்திகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் எந்திரங்களால் மணல் இரவு-பகல் என அள்ளப்பட்டதால் நம்பியாறு கொள்ளை போனது. தீவிர மணல் வேட்டைக்கு இந்நதி இரையாகி இன்று இறந்துபோனது.
உவரியில் ஆற்றின் கனிமவள மணல் திருட்டால் கழிமுகம் கூட பள்ளமாக்கப்பட்டது. விளைவு கடல்நீர் உட்புகுந்ததோடு பனைமரங்களும் வேரோடு சாய்ந்தன.நம்பி மலையில் நன்னீராய் வரும் நீர் திருமளஞ்சியை தொடும் போது சாக்கடையாய் உருமாற்றம் கொள்கிறது. ஏர்வாடியில் ஒவ்வொரு தெருவும் நம்பியாற்றில் போய் சேருகிறது. தெருவின் கழிவுநீர் ஆற்றில் சங்கமிக்கிறது. திருக்குறுங்குடி, ஏர்வாடி, திருமளஞ்சி, ராஜாக்கமங்கலம் பகுதியில் நம்பியாற்றை தேட வேண்டிய அவலநிலையே உள்ளது.
மணலை நாம் விலை பொருளாக மட்டுமே பார்த்து பழகிவிட்டோம். மணல் மனித வாழ்விற்கு மட்டுமல்ல இயற்கை ஆதாரத்திற்கும் விலைமதிப்பில்லாதது. இவை நீரை தாங்கி நிலத்திற்கு நீரை கடத்துவதோடு சேமித்து வைப்பதில் பெரும் பங்கு வகிப்பதால் இவையே நதியின் ஆன்மா எனலாம். ஆனால் நமது சுயநலத்திற்காக இவற்றை சூறையாடி வருவதால் நதிகளை கொன்று வருகின்றோம். கேரளாவில் 44 ஆறுகள் ஓடும் நிலையில் அதனை காக்க வேண்டும் என்ற உணர்வால் ஒவ்வொருவரும் அதனை சிதையாமல் காக்கின்றனர். நாமோ கண்ணை விற்று சித்திரம் வாங்கி கொண்டு இருக்கின்றோம்.
நம்பியாறு அழியவில்லை. நாம் அழித்துவிட்டோம். தாகத்தை தணித்த நதிக்கு கழிவுநீரினை பரிசாக அளிக்கின்றோம். புதர்மண்டி கிடப்பதோடு ஆற்றின் அடையாளம் தெரியாத வகையில் நம்பியாறு அழிவின் விளிம்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு, புதர்காடுகள் அகற்றுவதோடு மண் கொள்ளை மேலும் தொடராமல் தடுத்திட வேண்டும். மண்ணின் ரத்த ஓட்டமாக திகழும் நதிகளை நாம் வடிகாலாக மட்டுமே பார்ப்பதால் வேகமாக பல நதிகள் வேர் இழந்து வீழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் நம்பியாறு இணையாமல் இருக்க எல்லோரும் இணைந்து அதனை காக்க கரம் கோர்த்தாக வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply