சமூக பொதுநல இயக்கம் புகார் –
வாழும் போது தான் பிரச்னைகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இறந்த பின்பும் ஏன் பிரச்னைகள் பின்தொடர்கிறது..என்ற ஏக்கமே வயலூர் கிராம மக்களுக்கு..என்ன காரணம்? செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சிந்தாமூர் ஒன்றியம் நெற்குணம் ஊராட்சிக்கு உட்பட்டது வயலூர் கிராமம். ஊர் பெயரைப் போலவே செழிப்பான இவ்விவசாய கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இம்மக்கள் ஊரை ஒட்டி உள்ள ஒரு பகுதியினை மயானமாக கடந்த 90 வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சுடுகாடு, இடுகாடு உள்ளது. பறவணான் குட்டையில் இருந்து வயலூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியாகவே இம்மயானத்திற்கு கிராம மக்கள் வந்து செல்கின்றனர். மழைகாலங்கள் மற்றும் ஏரிக்கு பாசனத்திற்கு நீர் திறந்து விடும் காலங்களில் கால்வாயில் நீர் நிரம்பி செல்வதால் இக்கால்வாயினை கிராம மக்கள் பயன்படுத்த முடிவதில்லை.
இப்போது நீர் செல்லாத போதும் கால்வாயில் கால் வைக்க முடியவில்லை. காரணம் குறிப்பிட்ட பாசன கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்ட நிலையில் பாசன கால்வாய் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் வயலூர் ஏரிக்கு நீர்செல்வது தடைபட்டு உள்ளதோடு இந்த ஏரியினை நம்பி உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மேலும் இப்பாசன கால்வாய் மயானத்திற்கு செல்ல பாதையாக பயன்பட்டு வந்த சூழலில் கால்வாய் அடைபட்டதால் கிராம மக்கள் இறந்தவர்களது உடலை இவ்வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல இயலாத பரிதாப நிலை உள்ளது. இதனால் இறப்பு சோகத்தை விட மயான பாதை பரிதவிப்பே இப்பகுதி மக்களிடம் அதிகமாக உள்ளது.
எனவே இத்தகைய பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மயானத்திற்கு செல்ல அடிப்படையான பாதை வசதியினை அரசு இக்கிராம மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் வயலூர் ஏரிக்கு செல்லும் நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரத்தையும், விவசாயத்தையும் காத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply