குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மேல்பாறை. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு வள்ளியாறு பகுதியில் உள்ள உறைகிணறு மூலம் மேல்பாறை மேல்நிலை குடிநீர் தொட்டியில் நீர் எடுக்கப்பட்டு பின் இப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
மலைப்பாங்கான இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்காத நிலையில் இக்கிராம மக்கள் குடிநீருக்காக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சீராக நீர் விநியோகம் செய்யப்படாத சூழலில் தற்போது ஊராட்சியின் அலட்சிய போக்கினால் கிராம மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு குடிநீரும் நிறுத்தப்பட்டதால் பரிதவிக்கும் நிலைக்கு இக்கிராம மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இப்பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் துருபிடித்து பழுதான காரணத்தால் நீர் செல்ல தடை ஏற்பட்டு சரிவர செல்வதில்லை எனவும் குடிநீர் தொட்டி இதுவரை சுத்தம் செய்யப்பட்டதில்லை எனவும் இப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் 21ந் தேதி ஊராட்சி அலுவலகத்தில் காலிகுடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் இதுவரையில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளாததால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.
இதையடுத்து மேல்பாறை மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி மாவட்ட துணை தலைவர் S.ஜேசுராஜ், தக்கலை ஒன்றிய செயலாளர் L.தேன் ரோஜா மற்றும் மேல்பாறை கிராம மக்கள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply