சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் கடந்த 2017ல் மணல் குவாரிகள் அமைக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கட்டுமானப்பணிகளுக்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையை சேர்ந்த ஓர் தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தது. இதற்கென அந்நிறுவனம் ரூ 2.88 கோடி சுங்கவரி 38.40 லட்சம் ஜி.எஸ்.டி.வரியினை செலுத்தியது. இந்நிறுவனம் மணல் விற்பனை செய்ய திட்டமிட்ட நிலையில் தமிழக அரசு இதற்கு தடை விதித்தது.
மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அரசாணை வெளியிட்டது.இதனை எதிர்த்து குறிப்பிட்ட நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு அம்மணலுக்காக ரூ 12 கோடியினை அந்நிறுவனத்திற்கு வழங்கியது.இதையடுத்து அரசே மணல் விற்பனை செய்ய 2018 செப் 21ல் முன்பதிவை தொடங்கியது. அதிக விலை நிர்ணயம் செய்ததாலும், எம்.சாண்ட் ( மாற்றுமணல்) புழக்கத்தாலும் குறிப்பிட்ட மணல் விற்பனை ஆகாமல் தேக்கம் கண்டது.
குறிப்பிட்ட மணல் துறைமுகத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு பாராமுகமாய் முடங்கி கிடப்பதால் காற்று மற்றும் மழை உள்ளிட்டவற்றால் இவை விரயமாவதோடு இவற்றிற்கென துறைமுகத்திற்கு வாடகையாக வருடம் தோறும் அரசு பல லட்ச ரூபாய் செலுத்தி வருகிறது. இதனால் மக்கள் பணம் கோடிகணக்கில் விரயமாகி வருகிறது. வெளிசந்தையில் தேவைப்படும் மணலுக்கு இதனை விநியோகித்தால் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.
ஆனால் மாறாக தமிழ்நாட்டில் உள்ள மலைகள் அத்துமீறி கடுமையாக சூறையாடப்பட்டு வருகின்றன. கேரள மாநில தேவைக்கு மட்டுமல்ல விழிஞ்ஞம் உள்ளிட்ட துறைமுகத்திற்கான கற்களும் தமிழகத்தின் மலைகள் தகர்க்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய மலையாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளும் இம்மலை விழுங்கி மகாதேவர்கள் பிடியில் தப்பவில்லை.
இத்தகைய கனிமவளக் கொள்ளையால் குமரி மாவட்டம் வெகுவேகமாக தனது இயல்பு நிலையை இழந்து வருகிறது. இதுபோலவே ஏனைய பகுதிகளும் தீவிரமாக இவ்வேட்டையர்களின் அசுரப்பசிக்கு இரையாகி வருகின்றன. இருந்தும் இதனை பற்றி கண்டு கொள்ளாமல் தமிழக அரசு கள்ள மௌனம் காத்து வருகிறது..முடங்கி கிடக்கும் மணலை வழங்காமல் நிமிர்ந்து நிற்கும் மலைகளை வீழ்த்துவது எந்த மாடல் என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும்.இழப்பது மலைகளை மட்டுமல்ல நமது எதிர்காலத்தை என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply