சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீரனூர் சங்கிலிபாண்டி மகன் முத்துராசா.ஜே.சி.பி.ஓட்டுனர். இவருக்கு விஜயலெட்சுமி என்னும் மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமூக ஆர்வலராக மக்கள் நலப்பணிகளில் இவர் ஈடுபட்டு வந்து உள்ளார். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள 190 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற மக்களுக்கு வழங்கிட வட்டாட்சியரை அணுகி உள்ளார். ஆனால் வட்டாட்சியர் இவ்விஷயத்தில் உரிய அக்கறை காட்டாததால் முத்துராசா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி குறிப்பிட்ட பகுதியில் உள்ள பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் படி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் கோபம் அடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பினர் முத்துராசாவை கொலைவெறியுடன் அவரது கழுத்தில் தாக்கி உள்ளனர். இதனை தடுத்ததால் அவரது இரு கைகளும் துண்டானது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்குபதிவு செய்து உள்ள போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் இதுவரை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.அதிகாரிகளின் அலட்சியமும், ஆக்கிரமிப்பாளர்களின் அராஜகத்தாலும் இத்தகைய சம்பவம் அரங்கேறி உள்ளது. பொதுநல நோக்கோடு செயல்பட்டவர் மீதான இத்தகைய தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சமூக ஆர்வலர்களும், நியாயமாக செயல்படும் அதிகாரிகளும் சமூக விரோதக் கும்பல்களால் தாக்குதலுக்கு உள்ளாவது தற்போது தங்குதடையின்றி தொடர்நிகழ்வாகிப்போனது. சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் கள்ள மெளனம் காப்பதால் ஆக்கிரமிப்பாளர் தண்டனை வழங்கி வருகின்றனர். கனிமவளக் கொள்ளையும், மணல் திருட்டும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும், இயற்கை வள சுரண்டல்களும் கட்டுபடுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. இதன் மீது தலையீடு செய்பவர்கள் மீது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதால் சமூக செயற்பாட்டாளர்கள் பாதுகாப்புக்கு என சிறப்பு சட்டம் இயற்ற வேண்டியது அவசிய தேவையாக உள்ளது.
சமூக ஆர்வலர்.முத்துராசா மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்திட வேண்டும். முத்துராசா பாதுகாப்பினை உறுதி செய்வதோடு அவருக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்கிட வேண்டும். நீதிமன்ற உத்தரவினை அமுல்படுத்தி குறிப்பிட்ட பஞ்சமி நிலங்கள் முழுமையாக மீட்கப்பட வேண்டும்..கைகளை இழந்தவருக்கு அரசு உதவிக்கரம் நீட்டிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply