சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குறுகிய குலசேகரம் – அருமனை சாலையால் பெருகிய விபத்துக்கள்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான குலசேகரம் பகுதியில் இருந்து அருமனை பகுதிக்கு செல்லும் சாலை பிரதான பாதையாக திகழ்கிறது. இதனால் நாகர்கோவில், அருமனை, குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இவ்வழியாக இயக்கப்படுகின்றன. மேலும் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோரும் இச்சாலையினை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாக இது திகழ்கிறது.

இட்டகவேலி, திருவரம்பு, அரமன்னம், மாடிப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இச்சாலை இணைக்கும் நிலையில் இதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களின் இணைப்பு சாலையாக இது திகழ்கிறது. இட்டகவேலி பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக உள்ளதால் ஏராளமான பக்தர்களும் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இச்சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் கடும் அச்சத்துடன் கடக்கும் நிலை உள்ளது. காரணம் குறுகிய இச்சாலையின் இருபக்கங்களிலும் பள்ளங்களாக காட்சி அளிக்கிறது.

இதனால் எதிரே வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்காக இருசக்கர வாகனங்களில் வருவோர் ஒதுங்க முற்பட்டால் சாலையினை விட பக்கவாட்டு கரை மிகவும் தாழ்வாக இருப்பதால் தவறி விழுந்து விபத்திற்கு உள்ளாகும் நிலை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் பாதசாரிகள், வாகனங்களில் வருவோர் என பல்வேறு தரப்பினரும் தினமும் பாதிப்பினை எதிர்நோக்கி உள்ளனர். இதனால் பல உயிர் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

இருப்பினும் குறிப்பிட்ட சாலை விரிவுபடுத்தப்படவோ, பக்கவாட்டு கரை உயர்த்தப்படவோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இச்சாலையில் பயணிப்போர் மரண பீதியுடன் தான் சென்று வருகின்றனர். இவர்களது இன்னலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் விதமாய் அருமனை – குலசேகரம் பகுதியினை இணைக்கும் இச்சாலையினை விரிவுபடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, மனநல பாதுகாப்பு அணி செயலாளர் S. அருள்ராஜ், தியாகிகள் புகழ் பரப்பு அணி செயலாளர் C.டைட்டஸ் ராஜ், திருவட்டார் ஒன்றிய செயலாளர், Y.மரியசெல்வன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

பாதுகாப்பற்ற சாலை – பொதுமக்கள் அவதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை அகல கோரிக்கை
குலசேகரம் அருகே குறுகிய சாலை – வாகன நெரிசல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *