இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்து வாழையினை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இயற்கை சீற்றத்தாலும், வனவிலங்குகளின் அட்டகாசத்தாலும் பெருமளவில் வாழை விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் அதனை நம்பி பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாததால் மிகவும் நஷ்டப்படும் நிலை தொடர்கிறது. இது ஒருபுறமிருக்க நகர்மயமாதலின் விளைவாக பெரும்பாலான விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆக்கப்படுவதால் வாழை விவசாயம் வருடந்தோறும் குறுகி வருகிறது.
குமரி மாவட்டத்தில் ரசகதளி, பாளையங்கோட்டான், ஏத்தன், செந்தொழுவன், பூவன், பேயன், வெள்ளை தொழுவன், மட்டி, செம்மட்டி, சிங்கன், மோரிஸ், மொந்தை, கற்பூரவள்ளி, ஏலக்கி, நமரை, நெய் பூவன், ரொபேஸ்டா, சன்ன செங்கதளி உள்ளிட்ட 50 வகையான வாழை பயிரிடப்பட்டு வருகிறது. இவை பாரம்பரிய இனங்களாகும். வாழை விவசாயம் குறைவதால் பாரம்பரிய இனங்களும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இம்மாவட்டத்தில் விளையும் மட்டி பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இல் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அவர்களது தொழிலை மேம்படுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் அதிக விளைச்சல் உள்ள காலங்களில் விலை சரிவும் அழிவுக்கு உள்ளாகும் காலங்களில் பொருளாதார இழப்பும் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.
இதனை தடுக்கும் வகையில் வாழை விவசாயத்தையும், பாரம்பரிய இனங்களை காக்கவும், வாழையினை நம்பி வாழும் விவசாயிகள் வாழ்க்கை மேம்படவும் குமரி மாவட்டத்தில் வாழைதிருவிழா நடத்தப்பட வேண்டும். இந்நிகழ்வில் வாழை பொருட்களால் மதிப்பு கூட்டும் பொருட்கள் உருவாக்கம், விவசாயிகளுக்கான ஆலோசனை, சந்தை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, உதவிகள் அளித்திடுவதோடு இதுதொடர்பான கலை நிகழ்வுகளையும் நடத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் பேரா. C. மோகன், அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், விவசாய அணிசெயலாளர் N.கிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply