குமரி மாவட்டத்தில் 402.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இக்காடுகளே பல்வேறு வற்றாநதிகளின் பிறப்பிடமாய் திகழ்கின்றன. இந்நிலையில் இவ்வனபரப்பினை ஆக்கிரமித்து உள்ள மியூக்கோனா என்னும் வள்ளிச்செடிகளால் மரங்கள் அழியும் நிலைக்கு போய்விட்டது. அரசு ரப்பர் கழகம் சார்பில் ரப்பர் மரங்கள் பயிரிட்டபோது களைச்செடிகள் வளருவதை தடுக்கும் நோக்கத்தில் வள்ளிச்செடிகள் இறக்குமதி செய்யப்பட்டு நடப்பட்டன.
வேகமாக பரவி வளரும் இச்செடிகளால் களைச்செடிகள் கட்டுபடுத்தப்படுவது ஒருபுறமிருக்க வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைத்தவன் கதையைப் போல இவை மரங்களிலும் பற்றி படர்ந்து மரங்களையும் அழித்து வருகின்றன. இதனால் குலசேகரம், கோதையாறு,கொடுத்துறை, மூக்கறைக்கல் மல்லமுத்தன்கரை கிளவியாறு, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் காடுகளை கபளீகரம் செய்த வள்ளிச்செடிகளால் இப்பகுதி வனங்கள் அழிக்கும் நிலைக்கு சென்று விட்டது.
மேலும் இத்தகைய வள்ளிச்செடிகளால் வனங்களில் உள்ள மூலிகைச்செடிகள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த செடிகளும் அழிந்து போகிறது. வனவிலங்குகள் எதுவும் இச்செடிகளை இரையாக உட்கொள்ளாததாலும், பூமியில் உள்ள இச்செடிகளின் கிழங்குகள் மூலம் எளிதில் மேலும் மேலும் செடிகள் உருவாவதால் இதன் பரவலை கட்டுப்படுத்தவே முடியாத நிலையே ஏற்பட்டு உள்ளது.
களைக் கொல்லியாய் நடப்பட்ட செடி தற்போது வனக்கொல்லியாய் உருமாறி குமரி மாவட்ட வனத்திற்கும், பல்லுயிரினப் பெருக்கத்திற்கும் எதிராக பச்சை ஆக்டோபஸ் ஆக பரிணாமம் எடுத்து உள்ளது. சுற்றுசூழலுக்கும், நீர் ஆதாரத்திற்கும் அடிப்படையாக திகழும் குமரி மாவட்ட வனப்பகுதியினை அழித்து வரும் வள்ளிச்செடிகளை முழுமையாக அகற்றிட உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொதுசெயலாளர்
M அல்அமீன் ஷாகுல்ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர்
T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, மனநல பாதுகாப்பு பிரிவு செயலாளர் S. அருள்ராஜ், திருவட்டார் ஒன்றிய செயலாளர் Y.மரியசெல்வன்,
மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply