தமிழகம்-கேரளா இடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி போக்குவரத்துக்கு என உருவாக்கப்பட்டது ஏ.வி.எம்.கால்வாய். திருவிதாங்கூர் மன்னரின் குலதெய்வமான பத்மநாபசாமியின் மறுபெயரான அனந்தன், இங்கிலாந்து ராணியான விக்டோரியா, மன்னர் மார்த்தாண்டவர்மர் ஆகிய பெயர்களின் சுருக்கமே ஏ.வி.எம். எனப்படுவது. கடந்த 1860ல் திருவிதாங்கூர் மன்னர் உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மாவால் பூவாறில் இருந்து தொடங்கப்பட்டு தேங்காய்பட்டணம் வரை 100 அடி அகலத்தில் கால்வாய் வெட்டப்பட்டது. அதன் பின் 1863ல் ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜாவால் இப்பணி தொடரப்பட்டு 1867ல் மண்டைக்காடு வரை இக்கால்வாய் வரை வெட்டப்பட்டது. 1864 பிப்ரவரி முதல் இக்கால்வாயில் நீர்வழி போக்குவரத்து நடந்தது.
திருவிதாங்கூர் தலைநகரான திருவனந்தபுரத்தையும் நாட்டின் தென்கோடி எல்கையான கன்னியாகுமரியையும் நீர்வழிப்போக்குவரத்து மூலம் இணைப்பது, மேலும் கொச்சி, கொல்லம் வரை நீர்வழித்தடத்தை நீட்டிப்பு செய்வதுதான் ஏ.வி.எம்.கால்வாய் திட்டத்தின் நோக்கம். திருவனந்த புரத்தில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு படகு மூலம் பக்தர்கள் வந்து சென்று உள்ளனர். இதுபோல் குமரி மாவட்டத்தில் இருந்து கதம்பை, உணவு பொருட்கள் கேரளாவிற்கு இவ்வழியாக கொண்டு செல்லப்பட்டு நீர்வழி வணிகம் நடந்தது.. 1956 ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பின் இதன் முக்கியத்துவம் மறந்து ஆக்கிரமிக்க தொடங்கினர். மேலும் கழிவுகள், குப்பைகளை கொட்டி இதனை அழித்து விட்டனர். கால்வாயில் புதர்செடிகளும், ஆகாய தாமரைகளும் அடர்ந்து வளர்ந்து சுகாதார சீர்கேட்டின் சின்னமாய் காட்சி அளிக்கிறது.
மண்டைக்காடு பகுதியில் அகலமாக காட்சி அளிக்கும் தேசிய நீர்வழிப்பாதை -3 என அறிவிக்கப்பட்டு உள்ள இக்கால்வாய் குளச்சல், கொட்டில் பாடு பகுதிகளில் சுருங்கி 5 அடிக்கும் குறைவாக கழிவுநீர் கால்வாயாக தென்படுகிறது. குறும்பனை, வாணியக்குடி முதல் தேங்காய்பட்டணம் வரை குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது. தேங்காய்பட்டணம் முதல் நீரோடி வரை இப்பகுதி மக்கள் தாங்களே அடிக்கடி இதனை சுத்தம் செய்கின்றனர். நீரோடியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கேரளா மாநிலத்தில் ஏ.வி.எம் கால்வாய் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. சுற்றுலாத்துறையில் முன்னணியில் கேரளா இருப்பதற்கு காரணம் இதுபோன்ற கால்வாய்களும், உல்லாச படகுகளும்தான்..
ஆனால் தமிழகத்தில் இருந்த ஒரே நீர்வழித் தடமும் நமது அலட்சிய போக்காலும், ஆக்கிரமிப்பாலும் இழந்து நிற்கின்றோம். ஏ.வி.எம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை மீட்டுருவாக்கம் செய்வதோடு இக்கால்வாயினை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இதனால் இருமாநிலங்களுக்கு இடையில் நீர்வழி போக்குவரத்தால் சாலை நெருக்கடி அகலும். குமரி மாவட்ட விளை பொருட்கள் எளிதில் கேரளாவிற்கு வணிகத்திற்கு கொண்டு செல்ல இயலும்.சுற்றுலா வளர்ச்சி பெறுவதோடு வேலைவாய்ப்புகளும் பெருகும். கடல் அரிப்பு தடுக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் பாதுகாக்கப்படும். எனவே குமரியின் பொருளாதார, சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுசூழலுக்கும் தேவையான இக்கால்வாயினை சீரமைத்து மீண்டும் நீர்வழி போக்குவரத்தினை செயல்படுத்திடவேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர்கள் M.கேதரின் பேபி, S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் பேரா.C.மோகன், அமைப்பு செயலாளர் புதுக்கடை.பாண்டியன், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், மீனவர் அணிச் செயலாளர் A. ததேயுஸ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் C.V.முருகன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.















Leave a Reply