குமரி மாவட்டத்தில் பழையாறு, வள்ளியாறு. தாமிரபரணி ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் தூவாறு, நந்தியாறு, முல்லையாறு, கோதையாறு, பரளியாறு, கல்லாறு, மயிலாறு, சாத்தாறு, கிழவியாறு, குற்றியாறு, மாம்பழத்தாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கின்றன. தாமிரபரணி ஆறு கோதையாறு, பரளியாறு, நந்தியாறு, முல்லையாறு போன்ற ஆறுகளின் நீர் தொகுதியாகும். கருப்பையாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி எட்டு கணி, பத்து காணி வழியாக நெய்யாறு அணைக்கட்டை அடைகிறது.
மேலும் பாம்பருவி ஓடை என்கிற நரிக் கிர் ஓடை, பொன்னி ஓடை என்ற பன்றி வாய்க்கால் ஓடை ஆகியவை மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளது. ஆய் மன்னர்கள் காலத்தில் குமரி மாவட்டத்தில் நீர்வழிப்பாதைகளை கட்டமைத்து மேம்படுத்தினர். பாண்டிய மன்னரான இராஜசிம்மன் ஆட்சிக்காலத்தில் பரளியாற்றின் குறுக்கே பாண்டியன் அணை உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் சோழர்கள் ஆட்சிகாலத்தில் குமரியில் நீர் மேலாண்மை மிக சிறப்பாக பராமரிக்கப்பட்டது.
ஆண்டுக்கு சராசரியாக 2000 மி.மீட்டருக்கு மேல் மழை பொழிந்தும் அதனை உரியமுறையில் சேமிக்கும் வகையில் போதிய தடுப்பணைகள் கட்டப்படவில்லை. இதனால் கடலில் 11, 200 மில்லியன் கனஅடி நீர் வீணாக கலக்கிறது. இதனால் கோடை காலங்களில் மக்கள் தேவைக்கான நீரின்றி தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை பொழிந்தும் இந்நிலை ஏற்பட்டு உள்ளதற்கு அடிப்படை காரணம் உரியமுறையில் நீர் மேலாண்மை மேற்கொள்ளாதது தான் என்பது சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை.
குமரி மாவட்டத்தில் முல்லையாற்றின் குறுக்கே தடுப்பணை திட்டம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது தற்போது கிடப்பில் போடப்பட்டது. இதுபோலவே சுருளோடு அருகே உன்னிமலை திட்டம், திருநந்தி கரை பகுதியில் நந்தியாறு திட்டம், சுருளோடு பகுதியில் முட்டச்சி காயல் அணை திட்டம், கோதையாறில் அம்பாடி பகுதியில் தடுப்பணை திட்டம், உலக்கை அருவி தடுப்பணை உள்ளிட்ட 30 திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில் அத்தனையும் முடங்கி கிடக்கிறது. இதனால் நீர்நிலைகளில் போதிய நீரை சேமிக்க முடியாததுடன் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே மக்களும், விவசாயமும் பயன்பெறும் வகையில் முடங்கி உள்ள தடுப்பணைத்திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் Y.ராகுல், Y. மரியசெல்வன், D. தேவதாஸ், R.சாம் எட்வர்ட், A.அருள் சங்கர் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply