புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உணவு பழக்கம், சுற்றுசூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தரவுகளின்படி வருடம்தோறும் 2.5% இத்தகைய பாதிப்பு உள்ளானோர் அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறது. தமிழகத்தில் 2012ல் 53 ஆயிரமாக இருந்தவர் எண்ணிக்கை 2023 ல் 92 ஆயிரமாக அதிகரித்தது. குறிப்பாக நுரையீரல், கருப்பபை, மார்பு, கணையம், சிறுநீர், தோல் , புரோஸ்டேட் புற்றுநோய்களால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புற்றுநோயின் பாதிப்பு அதிகம் உள்ளதாக கண்டறியபட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் கடற்கரை மணலில் கதிரியக்க தன்மையால் ஏராளமான கடலோர கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். ஏனைய பகுதிகளிலும் பரவலாக இந்நோயின் பாதிப்பு உள்ளது. இதற்கான காரணம் இன்னும் அரசால் ஆய்வு செய்யப்படவில்லை. ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் புதிதாக இந்நோயினால் பாதிப்பு அடையும் நிலையே உள்ளது. இந்நோயினால் பாதிப்பு அடைந்தவர்கள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திற்கோ அல்லது சென்னைக்கோ தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கொரோனா காலத்தில் திருவனந்தபுரம் மண்டல கேன்சர் சென்டரில்(RCC) தினமும் குமரியில் இருந்து சிகிச்சைக்கு செல்லும் 560 நோயாளிகள் செல்ல இயலாத நிலையை கவனத்தில் கொண்டு 2020ல் அவர்களது மேற்பார்வையில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் புற்றுநோய் சிகிச்சை வார்டு செயல்படுத்தப்பட்டு. அதன்பின் இவ் வார்டு செயல்படுத்தபட்டு வந்தபோதும் மாவட்டத்தில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த வசதிகள் இங்கு இல்லை. இதனால் புற்றுநோயால் பாதிப்பிற்கு உள்ளானோர் தனியார் மருத்துவமனைகளை நாடவேண்டிய அவலம் உள்ளது.
இதனால் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் சிகிச்சை பெற வெளியூர்களுக்கு நீண்டதூரம் செல்லவேண்டிய நிலையில் உரிய சிகிச்சை பெற இயலாமல் பாதிப்பிற்கு உள்ளாகி இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் தங்கள் நிலபுலன்களை விற்று நிர்கதியான நிலையில் மன உளைச்சலுக்கும், கடனிற்கும் ஆளாகின்றனர். பலர் உரிய காலத்தில் நோயினை அறிய முடியாமல் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு செல்வதால் உயிர் இழப்பிற்கு உள்ளாகின்றனர். இவர்களது இத்தகைய பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் விதமாய் அதிகமான எண்ணிக்கையில் புற்றுநோயாளிகளை கொண்ட குமரி மாவட்டத்தில் அரசின் மண்டல புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தினை ஏற்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T. ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன்,துணை தலைவர் S.ஜேசுராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், மருத்துவர் அணிச் செயலாளர் Dr.A.பெர்லின்ங்டன், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய், திருவட்டார் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், செண்பகராமன்புதூர் செயலாளர் R..சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply