சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக 12 பேரின் மரணத்திற்கு காரணமான காட்டுயானை “ராதாகிருஷ்ணன்” வனத்துறையினரால் கடந்த 23.9.25 அன்று பிடிக்கப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு மாதம் பராமரிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது. 24 நாட்கள் ஆன நிலையில் 18.11.25 அன்று உயிரிழந்த நிலையில் குறிப்பிட்ட யானை கிடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் 20 அடி உயரத்தில் இருந்து யானை விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு யானை இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வனத்துறை அறிக்கை மரண காரணம் அகச் சிதைவு எனக் குறிப்பிட்ட போதிலும் குறிப்பிட்ட யானை மரணம் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.கைதிகள் என்கவுண்டர் செய்யப்படுவது போல குற்றவாளியாய் கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் கொடூரமாய் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். மலைகளில் வாழும் விலங்கான யானை சறுக்கி விழுந்து இறந்தது என்பது ஏற்புடையதாக இல்லை. புதிய பகுதியில் அறியாமையில் விழுந்தது என கூறினாலும் அதற்கு உரிய வாழ்விடத்தில் விடாமல் மாற்று பகுதியில் விட்டது யார் குற்றம்?
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட யானைகள் இறந்து உள்ளன. இதில் 30% மட்டுமே உரியமுறையில் விசாரிக்கபட்டு உள்ளது. கைது செய்யப்படுவதிலும், இறப்பவற்றிலும் பெரும்பாலானவை ஆண் யானைகளாகவே உள்ள நிலையில் வளமான வனத்தை உருவாக்கும் இவற்றை அழிப்பதால் உருவாகும் காட்டை அழிக்க திட்டமோ என கருத வேண்டி உள்ளது.இவ்வாறு காட்டு யானைகள் மரணம் அதிகரித்து உள்ள நிலையில் வருடாந்திர கணக்கெடுப்பில் மட்டும் யானைகள் எண்ணிக்கை கூடி இருப்பதாக கூறுவது கணக்கெடுப்பு சரியானது தானா? என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் கடந்த மாதம்1ம் தேதி ரோலக்ஸ் எனப்படும் காட்டுயானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு மானாம்பள்ளி பகுதியில் விடப்பட்டது. கோதையாறு பகுதி இதற்கு ஏற்புடைய பகுதி என்பதனை புறம் தள்ளி ஏற்கனவே மக்னா என்னும் யானை விடப்பட்டு தோல்வி அடைந்த இப்பகுதியில் விடப்பட்டு உள்ளதால் அருகில் உள்ள கேரள பகுதிக்கு சென்று மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையே ஏற்பட்டு உள்ளது. இதுபோலவே இவற்றை உரிய இடத்தில் விடுவிக்காதது அவற்றின் மீதான வன்முறையாகவே கருத வேண்டி உள்ளது.
இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா உயிரினங்களுக்கும் உரியது. தொடர் யானைகள் மரணம் வன உயிர்கள் மேல் வன்மம் தீர்ப்பதாகவே உள்ளது. உயிர் சங்கிலியில் ஒன்று விடுபட்டாலும் பாதிப்பு எல்லோருக்கும் தான். இதனை உணர்ந்து பேருயிரான ராதாகிருஷ்ணன் இறப்புக்கு உரிய நீதிவிசாரணை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இதுபோல் மரணங்கள் தொடராமல் தடுப்பதற்கு தடுப்பு நடவடிக்கையாய் அமையும். செயல்படுத்துமா தமிழக அரசு?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply