திங்கள் சந்தை முதல் கருங்கல் வரையிலான பிரதான சாலையில் திக்கணங்கோடு அருகே கால்வாய் மீது பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் கான்கிரீட் அடித்தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. இக்கால்வாயில் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கி காணப்பட்டது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நீரை அகற்றி அதன் பின் கட்டுமானப்பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இத்தகைய எதிர்பார்ப்புகளை முறியடித்து தேங்கிய நீரை அகற்றாமலேயே கான்கிரீட் கலவையை ஜே.சி.பி.எந்திரத்தில் கொட்டி அதன் பின் நீரில் கொட்டினர். இதனால் தேங்கிய நீருடன் கான்கிரீட் கலவையும் கலந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பணிக்கு நீர் தடங்கலாக இருந்த போதும் அதனை கவனத்தில் கொள்ளாமல் தங்கள் கடமையை நிறைவேற்றி உள்ளனர். இதுதொடர்பாக பகுதி மக்கள் கேட்டதற்கு உரியவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
குறிப்பிட்ட பணியால் பால கட்டுமானத்தின் உறுதி தன்மை கேள்விகுறியாக உள்ளது. அதன் தரத்தையோ, உறுதியையோ கவலை கொள்ளாமல் துறை அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாமல் வேலையினை முடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் குறிப்பிட்ட இடத்தில் பணிகள் நடைபெற்று உள்ளது. இதனால் மக்கள் பணம் விரயம் ஆவதுடன் இதில் பயணிப்போர் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே ஏற்பட்டு உள்ளது.
பாலம் என்பது நீரின் ஓட்டத்தையும், அதன்மேல் செல்லும் வாகனங்களின் எடையினை தாங்கும் திறனையும் அடிப்படையாக கொண்டு மிகவும் கவனமாக கட்டப்பட வேண்டிய கட்டுமானம் ஆகும். ஆனால் இது எதனைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் அமைக்கப்படும் இத்தகைய பாலத்தின் ஆயுள் மிகவும் குறுகியதாகவே இருக்கும். இதுபற்றி தக்கலை கோட்ட பொறியாளரிடம் கேட்டதற்கு தண்ணீருக்குள் பிளாட்பாரம் அமைக்கும் பணிதான் நடக்கிறது. எவ்வித பாதிப்பும் இல்லை என்கிறார். இது எந்தவித தொழில் நுட்பமோ தெரியவில்லை.
இது போல் பாலம் அமைந்தால் மக்கள் உயிருக்கு உலை வைக்கும் உயிர்கொல்லி பாலமாகவே இது அமையும். எனவே குறிப்பிட்ட பாலபணிக்கென கொட்டப்பட்ட கலவையினை அகற்றி தரமாக மக்கள் பயன்பாட்டிற்கு தக்கதாக பாலப்பணிகள் அமைத்திட வேண்டும்.இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் குமரி மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.















Leave a Reply