சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
உலக பாரம்பரியச் சின்னமான மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிகிறது.. இம்மலைத்தொடர் குமரி மாவட்டத்தில் மகேந்திரகிரிமலை, காற்றாடி மலை, தாடகை மலை, அசம்புமலை, கல் மலை, கோதைமலை, முத்துக்குழி வயல் மலை, நாகமலை, வெள்ளிமலை, மோதிரமலை, மைலார் மலை, காளிமலை, குருசுமலை, மங்களா மொட்டைமலை, மாங்காமலை, விளாமலை, கொட்டாரக் குன்று, பொதி அவுத்தான் குன்று, எலிப்பாறைக்குன்று, மொட்டைக்காவுமலை, வள்ளுவன் பொத்தை, மருத்துவாழ்மலை,
எட்டு காணி மலை, பத்து காணி மலை, அகஸ்தியர் மலை தென்பகுதி, மாறாமலை பாலமோர் மலை, வேளிமலை, பண்ணிப் பொத்தை, சீறை மடை மலை/ வில்லுசாரி மலை, தோட்ட மலை/ தச்சமலை, வில்லுக்குறி மலை, களியங்காடு மலை/ சுங்கான் மலை, தொட்டமலை/ தச்சமலை/ மாம்பழத்தாறு மலை, டிராபிக் பள்ளத்தாக்கு பொய்கை மலை உள்ளிட்ட பல்வேறு பெயர் கொண்ட மலைகளையும் குன்றுப்பகுதிகளையும் தன்னுள் கொண்டது. இங்கு பெய்யும் மழைப்பொழிவே மாவட்டத்தில் பாயும் ஆறுகளின் ஜீவனாகவும், மாவட்ட செழிப்பிற்கும், தனித்தன்மைக்கும் காரணமாய் உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினை கபளீகரம் செய்துவரும் நிலையில் பாதுகாக்கபடவேண்டிய மலைப்பகுதி பாதிப்பிற்கு உரிய பகுதியாக உருமாறிவருகிறது..குமரியில் இம்மலைகள் மூலமே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பெய்து வருகிறது. இவை மலைக்கள்ளர்களால் கொள்ளை அடிக்கப்படுவதால் காற்றழுத்த மண்டலங்களை பிரித்து மழையை ஏற்படுத்தும் நிலை பறிபோகிறது. மாவட்டத்தில் தற்போது காலநிலை மாற்றத்தால் வெப்பமும், கடும் குளிரும் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
வேளிமலை பகுதியில் நடைபெறும் வளக் கொள்ளையால் வள்ளியாறு உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதுபோலவே குமரி மாவட்டத்தில் தோட்டியோடு, சித்தரங்கோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் தங்குதடையின்றி மலைகள் உடைக்கப்படுவதால் நீராதாரங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மலைகள் அழிப்பால் காடுகள் அழிந்து மண் அரிப்பு ஏற்படுவதோடு பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் அடியோடு பாதிக்கப்படும் அவலநிலை உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் கொண்ட இம்மாவட்டத்தில் பாலைநிலமும் உருவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்வதை தடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்கிறார் அமைச்சர். துரைமுருகன்.இவ்விஷயத்தில் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் கள்ள மெளனம் காப்பதால் மேற்குதொடர்ச்சி மலை நம் கையில் இருந்து பறிபோய் வருகிறது. வளமும், வளர்ச்சியும் கேரளாவிற்கு.. கழிவும், அழிவும் தமிழ்நாட்டிற்கு என்ற நிலை தொடர்கிறது. மீட்டுருவாக்கம் செய்ய முடியாத இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்..இந்த புவியை நமது முன்னோரிடமிருந்து பெறவில்லை நாம்..வருங்கால தலைமுறையிடம் இருந்து கடனாக பெற்று இருக்கின்றோம்..இதை நாம் புரிந்து கொள்வது எப்போது?
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply