சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டத்தில்அரசு பேருந்துகளில் இயங்க மறுக்கும் தானியங்கி கதவுகள்- கேள்விக்குறியான பயணிகள் பாதுகாப்பு

Kanyakumari-Government-Bus-Automatic-Doors-Failure-Passenger-Safety-Samugapothunalaiyakkam-Complaint

சென்னையில் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்திட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்வதை தடுக்கவும், பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் உதவிகரமாக உள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் பெருமளவில் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு உள்ளதோடு படிக்கட்டு பயணங்களும் தடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் நாகர்கோவில் மண்டலம் மூலம் 12 பணிமனைகள் மூலம் 750க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவற்றின் பெரும்பாலான பேருந்துகளில் பயணிகள் நலன் கருதி தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றின் அநேக பேருந்துகளில் இத்தகைய தானியங்கி கதவுகள் பழுதடைந்த நிலையில் இவை பராமரிக்கப்படாமல் இயக்கப்படுகின்றன. சில பேருந்துகளில் உடைந்த தானியங்கி கதவுகள் மற்றும் அவசரகால கதவுகள் கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நாகர்கோவிலில் இயக்கப்பட்ட TN74 N1886 எண் கொண்ட அரசு பேருந்து உடைந்து தொங்கிய தானியங்கி கதவுடன் இயக்கப்பட்டது. ஆபத்தான முறையில் கதவு பெயர்ந்து தொங்கிய காட்சி வைரலான நிலையில் தொழில்நுட்ப பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பழுதால் தானியங்கி கதவுகள் செயல்படுத்தபடாதது ஒருபுறம் இருக்க பல பேருந்துகளில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இதனை பயன்படுத்தாமல் அலட்சியபோக்குடன் செயல்படுவதால் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஏனைய மாநிலங்களுக்கு முன்னோடியாக இத்தகைய திட்டம் செயல்படுத்துவது வரவேற்கதக்கது. ஆனால் அதனை சரிவர பயன்படுத்தாமலும், பராமரிக்காமலும் உள்ளதால் அரசின் நோக்கம் நிறைவேறாத நிலையிலேயே உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பையும், நலனையும் கருத்தில் கொண்டு பழுதடைந்த தானியங்கி கதவுகளை தாமதிக்காமல் சீரமைக்கவும், தவறாமல் அனைத்து பேருந்துகளிலும் ஓட்டுனர்கள் இதனை செயல்படுத்திடவும், இதனை கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அணி செயலாளர் L. ஜார்ஜ், மனநல மேம்பாட்டு பிரிவு செயலாளர் S. அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *