சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சகம் நாட்டில் உள்ள கனிமங்கள் இருக்கும் இடங்கள் ஆய்வு செய்து 24 வகையான கனிமங்கள் மற்றும் 6 வகையான அணு கனிமங்கள் என 30 வகை கனிமங்கள் இருப்பதாக கண்டு அறிந்து உள்ளது. இவற்றை சுரங்கம் தோண்டி எடுக்க தனியாருக்கு அனுமதி அளித்து உள்ளது. இதன்படி இதுவரை 48 கனிமத் தொகுதிகள் ஏலத்தில் 24நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு EIA விதிகளின்படி குவாரி திட்டங்களுக்கு உள்ளூர் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பது நடைமுறையாய் இருந்தது. இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கனிமவள சுரங்க திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டாம் என அறிவித்து உள்ளது. இதன்படி இத்திட்டங்களுக்கான அனுமதியை இனி மத்திய சுற்றுசூழல் அமைச்சகமே மேற்கொள்ளும். கனிமவளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தில் மாநில அரசும், மக்களும் இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது.
கனிமங்களை பிரித்தெடுக்கும் போது சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் பாதிப்பு உருவாகும். அணுகனிமங்களால் கதிரியக்கம் மூலம் பேராபத்து உருவாகும் நிலையில் கடற்கரை தாதுமணலை எடுக்கும் போது கடல் அரிப்பு உருவாகும். மக்களின் வாழ்வாதாரம் பறிபோவதுடன் வாழ்விடமும், வாழ்வும் சீர்குலையும் இத்தகைய திட்டங்களுக்கு கண்மூடிதனமாக, மக்கள் விரோத போக்கில் மாநில உரிமைகளை பறிக்கும் நோக்கில் வெளியிட்டு உள்ள இத்தகைய அறிவிப்பை கண்டிக்கின்றோம்.
கன்னியாகுமரியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் மூலம் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ் மிடாலம், மிடாலம், இணையம்,புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணு கனிம சுரங்கங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.இதையொட்டி 1.10.2024 அன்று இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தக்கலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய மத்திய அரசின் அறிவிப்பால் இத்திட்டம் செயல்படுத்திட எவ்வித தடையும் இல்லாமல் போய்விட்டது.
சுற்றுச்சூழலிலும், பொதுமக்கள் ஆரோக்கியத்திலும் பாதிப்பினை ஏற்படுத்திடும் இம்முடிவை மத்திய அரசு அலுவல் உத்தரவாக வெளியிட்டு உள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும், பேரழிவை உண்டாக்கும் திட்டங்கள் மீது பொதுமக்கள் முடிவை உறுதிசெய்யும் கருத்து கேட்பு கூட்டங்களை ரத்து செய்யும் அபாயகரமான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply