சமூக பொதுநல இயக்கம் புகார்-
சாலையில் பள்ளங்களை பார்த்து இருப்போம். ஆனால் பள்ளங்களில் சாலையை பார்த்தது உண்டா நீங்கள்? இத்தகைய அருமையான சாலையை பார்க்க தொலைதூரம் செல்ல வேண்டியது இல்லை.குமரி மாவட்டம் தக்கலை அருகே வந்தால் போதும். இங்குள்ள நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டன்விளை – மேல்பாறை சாலை தான் இத்தகைய பெருமைக்கு சொந்தம் கொண்டது.
இச்சாலையே மேல்பாறை, சித்தன் தோப்பு, சடையமங்கலம் உள்ளிட்ட கிராமங்களின் பிரதான பாதையாக உள்ளது. இங்கிருந்து கற்கள் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதால் சாலை பழுதாகி, எவ்வித பராமரிப்பும் இன்றி போக்குவரத்துக்கு பயனற்ற சாலையாக மாறிப்போனது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் செல்ல இயல்வது இல்லை.
இக்கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்கள் இச்சாலை வழியாக நடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் பாதசாரிகள் மிகுந்த சிரமப்பட்டே இச்சாலையினை கடக்க வேண்டிய நிலை உள்ளது. மழைகாலங்களில் இச்சாலை முழுவதும் நீர் தேங்கி இருப்பதால் தட்டு தடுமாறியே பயணிக்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது.
சாலையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக அப்படியே விட்டு விட்டார்களோ என்னமோ? பெண்கள், முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இச்சாலையினால் பாதிக்கபட்டு வரும் நிலையில் உரிய பணிகள் செயல்படுத்தபடாததால் துன்பங்கள் இக்கிராம மக்களுக்கு தொடர்கதையாகவே உள்ளது. எனவே சிந்துபாத் கதை போல தொடரும் இவர்களது துயரங்களை போக்கிடும் வகையில் குறிப்பிட்ட சாலையினை சீரமைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, தக்கலை ஒன்றிய செயலாளர் L.தேன் ரோஜா மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்,













Leave a Reply