நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொற்றையடி பகுதியில் அமைந்து உள்ளது மருந்து வாழ்மலை. அரியவகை மருத்துவ மூலிகைகள் இங்கு நிறைந்து உள்ளதால் இம்மலைக்கு அதுவே பெயராகப் போனது. இம்மலை இராமாயணத்தில் லெட்சுமணனை காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என கூறிவருகின்றனர். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமான மேற்கு தொடர்ச்சி மலையின் இறுதி பகுதியே இம்மலை. மூன்று முகடுகளை கொண்ட இக்குன்று 958 அடி உயரமும் 640 ஏக்கர் பரப்பளவையும் கொண்டது.
அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய வைகுண்டபதி இங்கு உள்ளது. அகத்தியர் இங்கு தங்கி பல சுவடிகள் எழுதி உள்ளார்.நாராயணகுரு இங்கு தியானம் செய்து ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது. ஏராளமான குகைக்கோயில்கள் இங்கு உள்ளன. 600க்கும் மேற்பட்ட மூலிகைகள் குடியிருக்கும் இம்மலை பல்லுயிரினங்களின் புகலிடமாகவும் திகழ்கிறது. மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் இந்திய எல்லையை முழுமையாய் காணலாம். முக்கடலையும், இயற்கை அழகையும் தரிசிக்கலாம்.
இத்தகைய அழகினை காணவும், ஆரோக்கிய விரும்பிகளும், ஆன்மீக பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் இம்மலையில் ஏறி வருகின்றனர். மலை ஏறுபவர்களது சொர்க்கபுரியாக இது திகழ்வதால் மலை ஏற்றம் மேற்கொள்பவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இருந்தும் இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப் படவில்லை. மேலும் மூலிகைச் செடிகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து மூலிகைச்செடிகளை அழித்து வருகிறது. இதனால் சஞ்சீவி மலை படிப்படியாய் தனது பொலிவை இழந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு என தேனி மாவட்டம் கொளுக்குமலை, மேகமலை, தொப்பி குன்று, பழனிமலை, கொல்லிமலை, ஏலமலை, சிறுவாணி மலை, மேகமலை பட்டியலில் மருந்து வாழ் மலையினையும் இணைத்து மலை ஏற்றம் மேற்கொள்ள உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள மூலிகைச் செடிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம் T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் E.சுரேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் C.V.முருகன், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply