சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
தமிழகத்தில் உள்ள 104 அகதிகள் முகாம் என்னும் திறந்தவெளி சிறைகளில் இலங்கை தமிழர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவைக்கப் பட்டு உள்ளனர். இதே காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்த திபெத், பர்மா, வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழர்களுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குடியுரிமை வழங்கபட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் குடியுரிமை இன்றி பல தலைமுறைகளாய் 85000 பேர் தவித்து வருகின்றனர்.
2015 ஜனவரி 9 க்கு முன் இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழ் அகதிகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், விசா அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் இருந்தாலும் சட்டவிரோத குடியேறிகளாக கருதபடமாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் 2செப்2025 அன்று வெளியிட்ட உத்தரவில் தெரிவித்து உள்ளது. இவர்கள் மீது குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் (Foreigners Act 1946) சட்டம் பாயாது என்ற விதி 1 செப்2025 முதல் அமலுக்கு வந்து உள்ளது.
இருப்பினும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாக்கள் (1 முதல் 5 ஆண்டுகள்) வழங்கபடாது என்ற உத்தரவு இவர்கள் குடியுரிமை பெறுவதற்கு முட்டுகட்டையாக உள்ளது. ஆனால் 1955 குடியுரிமை சட்டத்தின் கீழ் இலங்கை அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் கூறியது. இருப்பினும் 1986ல் வெளியான உத்தரவு, 1983 ஜூலைக்கு பின்வந்த இலங்கை அகதிக்கு குடியுரிமை வழங்க தடை விதித்தது. இந்த வழிகாட்டுதல் இன்னும் நடைமுறையில் உள்ளது.
2024 டிச 31 க்கு முன் இந்தியாவுக்கு வந்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், பெளத்தர், சமணர், பார்சி, கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மையினர் ஆவணங்கள் இல்லாமல் இருந்தாலும் இந்தியாவில் தங்க அனுமதிக்கபட்டு உள்ளனர். மேலும் 11 ஆண்டுகள் தொடர்ந்து வசித்தால் நீண்டகால விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இலங்கை தமிழர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ஆயிரகணக்கான தமிழர்கள் சட்ட அங்கீகாரம் இல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக உரிமைகளில் தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு சட்டபூர்வ தங்கும் உரிமை வழங்கினாலும் இந்திய குடியுரிமை வழங்கிட உரிய சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கை தமிழ் அகதிகள் கண்ணியமாக வாழ வழிவகை செய்திடும் வகையில் அவர்களது நலன் மற்றும் உரிமை காக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply