சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
தமிழ்நாடு முழுவதும் உள்ள 3.44 கோடி மின்நுகர்வோர்களில் 2.45 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதுடன் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. இலவச மின்சார பயனாளிகள் போக மாதம் சராசரியாக 1.15 கோடி பேர் மின்கட்டணம் செலுத்துகின்றனர். தற்போதைய அளவீட்டு முறையின்படி 500 யூனிட் வந்தால் ௹1725 கட்டுபவர்கள் 600 யூனிட் வந்தால் ரூ2750 கட்ட வேண்டிய நிலையில் உள்ளது.
இதனால் மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும் நிலையில் இருந்து மாறி மின்கட்டணத் தொகையினை கேட்டாலே ஷாக் அடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இருமாதங்களுக்கு ஒருமுறை மின் பயனீடு அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின்கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டுவரப்படும் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து வெற்றியும் பெற்றது.
ஆனால் வருடம் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பும் இத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.தமிழகத்தில் மின்இணைப்புகளில் பொருத்த ரூ20 ஆயிரம் கோடியில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் ஒப்பந்த புள்ளி கோரியது. இதன்படி மாதாந்திர மின்கட்டண திட்டத்தினை செயல்படுத்தப்படும் எனவும், மின் பயன்பாட்டை துல்லியமாக அளவிடமுடியும் எனவும் மின் கணக்கீடு வெளிப்படை தன்மையுடன் இருக்கும் எனவும் அரசு தெரிவித்து இருந்தது.
பிற மாநிலங்களில் ரூ 900க்கு வாங்கப்படும் ஸ்மார்ட் மீட்டர்கள் தமிழ்நாட்டில் ரூ7000 என கூறப்பட்டதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் தற்போது சென்னையில் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே சோதனை ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் மின்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2025க்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் அளித்த உறுதிமொழியும் தேர்தல் கால வாக்குறுதி போலவே ஆகிப்போனது.
மாதாந்திர மின்கட்டண வசூலிக்கப்படும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தங்களிடம் இருந்து மின்கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் கொள்ளையில் இருந்து விடுபடலாம் என்று எதிர்பார்த்து உள்ள மக்கள் தற்போது ஏமாற்றம் அடைந்து உள்ளனர். எனவே மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக அதிகபடியான மின்கட்டணம் வாங்கப்படுவதால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர மின்கட்டண வசூல் திட்டத்தினை செயல்படுத்திட அ அரசு தீவிர கவனம் செலுத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply