சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் 3 ஆயிரத்து 852கி.மீ தூரத்துக்கு ரயில்வே வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள்தொகை, பரப்பளவை ஒப்பிடும்போது இன்னும் கூடுதலாக 4 ஆயிரத்து 131கி.மீ இருப்புப்பாதை வழித்தடங்கள் தேவை. திருநெல்வேலி- நாகர்கோவில் 74கி.மீ ரயில்பாதை 8.4.1981ல் கன்னியாகுமரி- திருவனந்தபுரம் 87கி.மீ ரயில்பாதை 15.4.1979ல், விருதுநகர் – அருப்புக்கோட்டை மீட்டர்கேஜ் பாதை 1.9.63 ல், அருப்புக்கோட்டை- மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 2.5.1964ல் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இத்திட்டங்கள் மட்டுமே சுதந்திரம் அடைந்தபின் தென்மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இருப்பு பாதைகள். அதன்பின் எந்த ஒரு புதியபாதையும் இதுவரை அமைக்கப்படவில்லை.
திசையன்விளையில் இருந்து உடன்குடி மற்றும் திருச்செந்தூருக்கு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின் போது ரயில்கள் இயக்கப்பட்டன. பாரி அன்கோ நிறுவனம் மூலம் 18.7.1915 முதல் இயக்கப்பட்ட ரயில்கள் இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியால் 4.2.1940ல் முற்றிலுமாய் முடங்கிப்போனது. தற்போது அந்த பகுதியில் ரயில் இயக்கப்பட்டதற்கான அடையாளமே தென்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரையிலான பகுதிகளை இணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டத்தினை மத்திய அரசு கடந்த2007.2008 ஆண்டுகளில் அறிவித்தது.
இவ்வழித்தடத்தில் மகாபலிபுரம், புதுச்சேரி, கடலூர், வேளாங்கண்ணி, ராமனாதபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி என பல்வேறு பகுதிகள் உள்ளதால் சுற்றுலா, ஆன்மீகம் தலங்களை இவ்வழித்தடத்தை இணைப்பதோடு பயணிகள் பயண நேரத்தை வெகுவாக குறைப்பதாகவும் அமையும் என்பதால் மக்கள் இத்திட்டத்தினை எதிர்பார்த்து உள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமனாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட மக்களும் புதுச்சேரி மாநில மக்களும் இதனால் மிகுந்த பயன்பெறுவர்.
இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய இப்பகுதி முன்னேற்றம் அடைவதோடு, துறைமுகங்கள் நேரடியாக ரயில் பாதை மூலம் இணைக்கப்படுவதால் சரக்கு போக்குவரத்து எளிமையாகும். மேலும் தற்போது இவ்வழித்தடத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கும் பயன் உள்ளதாக அமையும்.இத்திட்டத்திற்கு என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காரைக்குடி முதல் ராமனாதபுரம் வரை ராமனாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை என இரு பகுதிகளாக திட்டமிடப்பட்டு 462.47கி.மீ தூரத்திற்கு இப்பாதை அமைப்பதற்கான செலவு 1965.763 கோடி ஆகும் என மதிப்பிடபட்டது. காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரையில் 34 ரயில்நிலையங்கள் அமைக்கவும் இதன்படி திட்டமிடப்பட்டது.
திருச்சியில் 11.3.2017 ல்நடைபெற்ற விழாவில் பேசிய மத்தியரயில்வே துறை அமைச்சரும் இத்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். ஆனால் ரேட் ஆப்ரிட்டன் அதாவது போதிய கட்டணம் வசூலிக்க இயலாது என காரணத்தை கூறி இத்திட்டத்தினை இதுவரை மத்திய அரசு செயல்படுத்திட ஆர்வம் காட்டவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே திட்டம் முடங்கி கிடக்கிறது. இதனால் மக்கள் பயன்பெற இயலாத நிலையே உள்ளது. தென்மாவட்ட வளர்ச்சிக்கும், போக்குவரத்திற்கும் இத்திட்டம் மிகுந்த ஆதாரமாக இருக்கும் என்பதால் மீண்டும் மறுஆய்வு செய்து திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply