சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சென்னையில் 2 வழித்தடங்களில் 55கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேலும் 116கி.மீ தூரத்திற்கு நீட்டிப்பு செய்திடும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் மற்றும் கலை மற்றும் பண்பாட்டிற்கு தலைநகராக விளங்கும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்திட தமிழக அரசு முடிவு எடுத்தது.
இதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) விரிவான திட்ட அறிக்கையினை(DPR) தயாரித்து தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு வழங்கியது. கோவையில் சுமார் 31.5கி.மீ தூரம் 32 நிலையங்களுடன் அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலை வழியாக ரூ10748 கோடி செலவில் அமைப்பது எனவும், மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.93கி.மீ தூரத்திற்கு 17 நிலையங்களுடன் ரூ 11368 கோடி செலவிலும் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் 14.11.25 அன்று வெளியிட்ட அறிக்கையின் படி இத்திட்டங்களை நிராகரித்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. இரு நகரங்களில் 20 லட்சத்திற்கும் கீழ் மக்கள் தொகை உள்ளதால் இத்திட்டத்தை குறிப்பிட்ட பகுதியில் செயல்படுத்த அனுமதி மறுத்து உள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மத்திய அரசு இங்கு மக்கள்தொகையை பரிசீலிக்கிறது. தற்போது கோவையில் 30 லட்சத்து 81 ஆயிரத்து 594 வாக்காளர்களும், மதுரையில் 27 லட்சத்துட40 ஆயிரத்து 631 பேரும் உள்ள நிலையில் தற்போதைய மக்கள்தொகையினை ஏற்க மறுப்பது மத்திய அரசின் பாரபட்சமான போக்கினை காட்டுகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்திட 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்று சொல்லும் நிலையில் 16 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஆக்ராவில், 17 லட்சம் மக்கள்தொகை கொண்ட பாட்னாவில், 18.8 லட்சம் மக்கள் கொண்ட போபாலில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது எப்படி? மேலும் உத்தரபிரதேசம் மாநிலம் தான்பூர், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்,புனே, மத்திய பிரதேசத்தில் இந்தூர், குஜராத்தில் சூரத் உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசு நிர்ணயித்து உள்ள மக்கள் தொகை குறைவாக இருந்த போதும் அனுமதி அளித்து எப்படி?
இதன்படி மத்திய அரசின் மாறுபட்ட போக்கினை உணர முடிகிறது. பொருளாதாரம், சமூகம், கல்வி ரீதியாக ஒன்றிய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் தமிழகம் முதலிடம் வகிக்கும் நிலையில் நிதி ஒதுக்கீட்டிலும், வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதிலும் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது கண்டிக்கதக்கது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இரண்டாம் நிலை நகரங்களிலும் இது நடைமுறைக்கு வந்தால் போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறைவதோடு, பொது போக்குவரத்தால் சுற்றுச்சூழல் மாசு பாடும் குறையும். எனவே மக்கள் நலன்கருதி இத்திட்டங்களை செயல்படுத்திட மத்திய அரசு உரியஅனுமதி அளித்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply