சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சென்னையின் அடையாளங்களாக விளங்கும் அடையாறு, கூவம், பக்கிங்கம் கால்வாய் ஆகிய மூன்றும் ஒரு காலத்தில் மிக சிறந்த நீர்வழிப்பாதையாக இருந்தவை. இப்போது அசுத்தங்கள் சங்கமித்து மக்கள் புறக்கணிக்கும் கழிவுநீர் கால்வாய் ஆகிப் போகின. கடந்த 65 ஆண்டு காலங்களில் சென்னையின் அதிவேக வளர்ச்சிக்கு இத்தகைய ஆறுகள் பலியாகின. தொழிற்சாலைகளின் பெருக்கம்,மக்கள் நெருக்கம் காரணமாக அழகுநதிகள் தங்கள் ஜீவனை இழக்க தொடங்கின.
அடையாறு ஆதனூரில் இருந்து சென்னைக்குள் நுழையும் போது தாம்பரத்தில் இருந்து அதனை கழிவுகள் தழுவுகிறது. திருநீர்மலையை கடக்கும் போது மருத்துவக் கழிவுகள் ஆற்றில் புதைகிறது. அனகாபுத்தூரை கடக்கும் போது தொழிற்சாலை கழிவுகள் கலக்கிறது. கோட்டூர்புரத்தில் கட்டுமான மற்றும் திடக்கழிவுகளால் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. இவ்வாறாக அடையாறு ஆறு சந்திக்கும் வன்கொடுமை பற்றி யாரும் சிந்திப்பதாய் இல்லை. இதுபோலவே கூவம் உள்ளிட்ட ஆறுகள் நஞ்சாகிப்போகின.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் அடையாறு, கூவம் ஆற்றின் வழியாக பெருக்கெடுத்து கடலில் கலக்கிறது. இதையொட்டி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரையிலான கடற்கரை பகுதிகள் வெண்நுரை படர்ந்து காட்சி அளிக்கிறது.ஆற்றில் விடப்படும் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுகள், ரசாயன கழிவுகள் இத்தகைய நுரை உருவாவதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுபோலவே கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்தபோதும் இதுவரை இந்நிலை இன்னும் நீடிக்கிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் இவ்விஷயத்தில் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தும் மாசுகட்டுப்பாட்டு வாரியமும், சென்னை மாநகராட்சியும் போதிய நடவடிக்கை எடுக்காததின் விளைவாக மீண்டும் மெரினா நுரைதள்ளி வருகிறது. முகத்துவார பகுதிகளில் இத்தகைய நச்சு நுரைகளால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இங்கு மீன்வளம் முழுமையாய் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இத்தகைய ஆறுகளை புனரமைக்கும் பணிகள் பல கோடி செலவில் நடந்தும் அவை கடலில் கரைத்த காயம் போலவே தென்படுகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாக செயல்படுத்தப்படாததாலும் கழிவுகள் ஆறுகளில் கலப்பது தடுக்கப்படாததாலும் பாதிப்புகள் தொடர்கிறது. இதனால் சுற்றுசூழலும் சுகாதாரமும் மட்டுமில்லாது மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும், உயிர் பன்மயமும் சீர்குலைந்து உள்ளது. எனவே இத்தகைய நிலைக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு ஆற்றில் கழிவுநீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு விடப்படுகிறதா? என்பதை முழுமையாய் கண்காணிக்கபட வேண்டும். ஆற்றின் கரையில் மனித நாகரிகம் பிறந்தது வரலாறு. அந்த ஆற்றையே அழிப்பது தான் நாகரிகத்தின் நீட்சியா?
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply