சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு பாலம்..முதல்வர் மெளனம் கலைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

Encroachment bridge in Chengalpattu district

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்துள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சித்தேரி மற்றும் பெரிய ஏரி எனப்படும் நீர்நிலைகள் உள்ளன. இதில் சித்தேரி 100 ஏக்கர் பரப்பளவும் பெரிய ஏரி 116.5 ஏக்கர் பரப்பளவும் கொண்டவை. இதனை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. இந்நிலையில் சித்தேரி முதல் பெரிய ஏரி வரையிலான பகுதிவரை 600 மீ தூரத்திற்கு 15 அடி அகலத்தில் தார்சாலை அமைக்கப்பட்டு தற்போது இங்கு மேம்பாலமும் கட்டப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட சாலை இங்குள்ள ஏரி, வனப்பகுதிகள், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு கட்டப்பட்டு வரும் பாலத்திற்கோ, சாலை அமைக்கும் பணிகளுக்கோ அரசின் உள்ளாட்சி, வருவாய்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட எவ்வித துறைகளும் எவ்வித அனுமதியோ, ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றோ இதுவரையில் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இப்பகுதியில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் 300 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய உள்ளதாகவும் அதற்காகவே குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதற்கு என 30 அடி அகலத்தில் பால கட்டுமானப்பணிகள் நடப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. அதிகார பின்புலம் கொண்ட இந்நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் பணிகள் என்பதால் அரசு துறைகள் கள்ள மெளனம் காக்கின்றன.

சட்டமும், அரசு விதிமுறைகளும் வெகுஜன மக்களுக்குத் தான் அதிகார பிடியில் உள்ளவர்களுக்கு இல்லை என்பதை இந்நிகழ்வுகள் வெட்டவெளிச்சம் ஆக்கி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு கல்குவாரி மற்றும் மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்குண்ட நிலையில் அவர்களை கட்டுபடுத்த இயலாத நிலையில் அரசு தவித்து வருகிறது.இந்நிலையில் ரியல் எஸ்டேட் எனப்படும் மண்விழுங்கி மகாதேவன்களால் பல இடங்களிலும் விளைநிலங்கள் கூறுப் போடப்படுவதுடன் விவசாயம் வேரறுக்கப்படுகின்றன.

இதன் படி பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்புக்காக அரசால் தாரைவார்க்கப் பட்ட நிலையில் நீதிமன்ற தலையீட்டால் சதுப்புநிலம் தப்பித்து உள்ளது. இதுபோலவே தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளும் இத்தகைய நபர்களால் கபளீகரம் செய்யப்பட்டு வரும் நிலையில் இதன் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, அத்துமீறல்களையும் அரசு கண்டுகொள்ளாதது அரசின் மீதான நம்பகதன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஊனமாஞ்சேரியில் ஒளிந்திருக்கும் உண்மைகள் மறைக்கப்படுமா? மறக்கப்படுமா?

செங்கல்பட்டு ஆக்கிரமிப்பு பாலம் புகைப்படம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு பாலம்
Social welfare movement raises question Chengalpattu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *