திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தின் போது குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி முதல் கேரள மாநிலம் நெடுமங்காடு வரையிலான சாலை பிரதான பாதையாக பயன்படுத்தப்பட்டது. பல்வேறு மலைகிராமங்களை இணைக்கும் இச்சாலை இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டி செல்வதால் இதனை சொர்க்க வழியாகவே சுருங்கச்சொல்லலாம். தற்போது குமரி மாவட்டம் வழியாக செல்லும் கனிமவள கனரக வாகனங்கள் செல்லும் பாதையாக திகழ்கிறது.
இச்சாலையில் ஆரல்வாய்மொழி முதல் நெசவாளர் காலனி வரையிலான பகுதியில் மின்விளக்குகள் உள்ளதால் மக்கள் சிரமம் இன்றி செல்கின்றனர். ஆனால் இதையடுத்து செண்பகராமன்புதூர் சந்திப்பு (காட்டுமடம்) வரையில் மின்விளக்குகள் இல்லாததால் இப்பகுதி இருளில் மூழ்கி கும்மிருட்டாக காட்சி அளிக்கிறது. செண்பகராமன்புதூர் மற்றும் இதன் சுற்றுவட்டார மக்களின் பிரதான சாலையான இப்பகுதியில் சமத்துவபுரம், நெசவாளர்காலனி, வேதாந்திரி நகர் உள்ளிட்ட கிராமங்களும் உள்ளதோடு செங்கல் சூளைகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. மக்கள் பயன்பாட்டில் உள்ள இச்சாலை இரவு காலங்களில் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் சாலை வளைவுகள் உள்ளதால் இதனை அறியாத வாகனங்கள் எளிதில் விபத்திற்கு உள்ளாகின்றன. இத்தகைய விபத்துக்களில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பாதசாரிகளும் வழிப்பறி மற்றும் அசம்பாவிதங்கள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் குறிப்பிட்ட இடத்தினை கடந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது. விளக்குகள் இல்லாததால் வனவிலங்குகள், விஷ ஜந்துக்களால் தாக்கப்படும் நிலையால் மரண பீதியுடன் மக்கள் இவ்வழியை கடக்கின்றனர்.
குறிப்பிட்ட பகுதியில் கட்டளைக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் சாலையினை ஒட்டி தாழ்வான பகுதிகளும், அபாயகரமான வளைவுகளும், ஆரல்வாய்மொழி கணவாயின் வழிப்பாதை என்பதால் அதிக வேகத்துடன் காற்று வீசும் பகுதி என்பதாலும் விபத்துக்கள் அடிக்கடி நேரும் பகுதியாக காவல்துறை குறிப்பிட்ட இடத்தினை அறிவித்து உள்ளது. இருந்தும் இதனை தடுக்கும் விதமாக குறிப்பிட்ட பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாத நிலையில் மக்கள் துன்பங்களை தினமும் சந்தித்து வருகின்றனர்.எனவே இவர்களது இன்னலை போக்கிடும் வகையில் குறிப்பிட்ட இடத்தில் மின்விளக்குகள் அமைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம் T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்டத் தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் M.மரிய அற்புதம், செயலாளர் Y.ராகுல், செண்பகராமன்புதூர் செயலாளர் R சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply