சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கடுமையான சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்திடும் குப்பை எரி உலைகளை அத்தியாவசிய தேவை என்ற பெயரில் மத்திய அரசு மக்கள் மீது திணிக்க முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடுமையான மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் எனப்படும் சிவப்பு பட்டியலில் இருந்து கட்டுபாடுகள் இல்லாத நீலப்பட்டியலுக்கு அரசு மாற்றி உள்ளது. மேலும் இத்ததைய திட்டங்கள் அடிப்படை சேவைகள் என வகைப்படுத்தி அவற்றுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க முடிவு எடுத்து உள்ளது.
அமெரிக்கா செயல்படுத்தி வந்த குப்பை எரி உலைகள் அதன் தீமை கருதி கடந்த 25 வருடங்களில் 53 எரி உலைகளை நிறுத்தியது. கலிபோர்னியாவில் செயல்பட்ட அதன் கடைசி எரி உலையினையும் சமீபத்தில் மூடிவிட்டது. 1995க்கு பின் எந்த வித புதிய எரி உலைகளையும் அந்நாடு கட்டவில்லை.ஆனால் இந்தியாவில் புதியதாக 556 குப்பை எரி உலைகள் கட்டவும் இதன்மூலம் தினமும் 2 லட்சத்து 20 ஆயிரம் டன் குப்பைகள் எரிக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது.
கழிவு குப்பைகளை இந்த ஆலைகளின் மூலம் எரிப்பதால் அதன் அளவை குறைக்கலாமே தவிர அதனை அழிக்க இயல்வதில்லை. இவற்றில் இருந்து வெளியாகும் நச்சு புகையும், சாம்பலும் நிலத்தையும், நீர் ஆதாரங்களையும், காற்றையும் மாசு படுத்துவதோடு மக்கள் ஆரோக்கியத்திற்கும், சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன. உயர்வெப்பநிலையில் எரித்தாலும் மெர்க்குரி, காட்மியம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்கள் தனது நச்சுதன்மையை இழப்பதில்லை. இத்தகைய நச்சால் கருசிதைவு, மூளை, நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய், தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளே ஏற்படுகின்றன.
இருப்பினும் நகர்புற குப்பை மேலாண்மை என்ற பெயரிலும், விரைவான வளர்ச்சி என்ற பெயரிலும் சுற்றுசூழலுக்கும், சுகாதாரத்திற்கும் எதிராக மேற்கொள்ளும் மத்திய அரசின் இத்தகைய ஆபத்தான இத்திட்டத்தினை செயல்படுத்திடும் முடிவை கைவிட வேண்டும். குப்பை எரி உலைகள் மூலம் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் நிலையில் மக்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்கும் வகையில் திருத்தம் மேற்கொள்வது மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதோடு அவர்களது குரலை ஒடுக்கும் முடிவாகும்.
கடந்த 176 ஆண்டுகளில் 2015-2025 இடையிலான ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகள் என உலக வானிலையியல் அமைப்பு உயரும் புவிவெப்பநிலை குறித்து கவலை தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சூழல் நீதிக்கும், சமூகநீதிக்கும் எதிராகவும், சூழலியல் சீர்கேட்டிற்கு காரணமான ஆபத்தான திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பது நாட்டிற்கு மட்டுமல்ல, மனிதகுலத்திற்கே செய்யும் துரோகமாகும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply