சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் கடந்த 1973 மற்றும் 2000ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி பள்ளி சான்றிதழ்களில் சாதி, மதம் குறிப்பிடாமல் அதனை காலியாக விடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால் சாதி, மதம் அற்றவர் என சான்று வழங்கிட இதுவரை அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் பல இடங்களிலும் சாதி மற்றும் மதம் அற்றவர் என வலியுறுத்தி சான்று வழங்க கேட்போர் அலைக்கழிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது.
இருப்பினும் கடந்த 2019ல் வேலூர் சிநேகா பார்த்திபராஜா, இதைத்தொடர்ந்து கோவை நரேஷ் கார்த்திக் தனது குழந்தைக்கு பகீரத பிரயத்தனத்திற்கு பின் சாதி மதம் அற்றவர் என சான்று பெற்றனர். தற்போது திருப்பத்தூர் சந்தோஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த நிலையில் நீதிபதிகள் குறிப்பிட்ட சான்று வழங்கிட உத்தரவு பிறப்பித்து உள்ளனர். மேலும் இதுதொடர்பாக உரிய ஆணையினை பிறப்பிக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளனர்.
அம்பேத்கர், பெரியார் என பல்வேறு தலைவர்களும் ஜாதி ஒழிப்பிற்காக போராடிய நிலையில் அவர்களது கொள்கைகளை பின்பற்றி அரசு நடத்துவதாக கூறி கொள்பவர்கள் ஏன் இதுவரை ஜாதி ஒழிப்பிற்காக முனைப்பு காட்டவில்லை என்பதற்கான பதில் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பாகுபாடுகளை ஏற்படுத்தி அரசியல் அதிகாரங்களை பெறுவதில் மட்டுமே இவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் மேலும் மேலும் ஜாதிய வன்முறைகளும், ஆணவக்கொலைகளுமே அரங்கேறி வருகின்றன.
இடஒதுக்கீடு, வேலைவாய்புகள் என ஜாதியின் பெயரால் தொடரும் சலுகைகளை புறந்தள்ள முடியாமல் ஜாதி, மத கண்ணிக்குள் இருந்து மீளமுடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இது ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி என்பதை உணர்ந்த போதிலும், உணர்வு கொண்டவர்கள் அதன் அடையாளங்களை விட்டு அகலமுடியாதது ஜனநாயக தோல்வியாகவே கருத வேண்டி உள்ளது.ஆதிதிராவிடர் ஒருவர் இந்துவாக இருந்தால் வழங்கப்படும் சலுகை அவர் கிறிஸ்தவராக இருந்தால் மறுக்கப்படுவது ஜனநாயக வன்முறை என்று தானே சொல்ல வேண்டி உள்ளது.
பிறப்பால் சாதி, மதம் இல்லாத நிலையில் சமூகத்தால் திணிக்கப்படும் இத்தகைய அடிமை சங்கிலிகளை அகற்றி தான் சாதி, மதம் அற்றவர் எனச்சொல்லும் தனிமனித உரிமை மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் இருள் குடிலில் வெளிச்ச கீற்றை விதைத்து உள்ளது வரவேற்க தக்கது. எனவே நீதிமன்ற பரிந்துரையின் படி தமிழக அரசு ஆணை பிறப்பித்திட தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply